Friday, September 26, 2008

மிச்சமிருக்கும் மனிதநேயம்

image

அரசியல்வாதிகள் திரும்பத் திரும்ப செய்யும் தவறு, திரைக் கலைஞர்கள் மீது நடத்தும் அநாவசியத் தாக்கு தல்கள். யாரைத் தாக்கினால் எளிதில் விளம்பரமும் பரபரப்பும் தங்களைச் சூழ்ந்து கொள்ளும் என்ற சூட்சுமம் புரிந்தவர்கள் இந்த அரசியல் வியாதிகள். அந்த விளம்பரம்தான் அதிகார வியாபாரத்துக்கு இவர்கள் போடும் முதலீடு.

ஆனால் மக்களோ இதைப்பற்றி யோசிப்பதுகூட இல்லை பல நேரங்களில். தாங்கள் கண்ணால் பார்க்கும் உண்மைகளைக் கூட உணராமல், இந்த போலி அரசியவ்வாதிகளின் பின்னால் போய், நல்ல மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்துகிறார்கள்.

ரஜினி கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்ற உண்மையை இவர்களில் பெரும்பாலோர் கண்ணால் பார்த்தவர்கள்தான். ஆனால் அதை உணர மறுத்தார்கள், சுயநல மீடியா மற்றும் போலி அரசியல்வாதிகள் போட்ட கூச்சலில் மயங்கி.

பலரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பெருந்தன்மையில் ரஜினி செய்த ஒரு விஷயத்தை, வேண்டுமென்றே எதிர்மறையாக்கி, ஒரு இனத்துக்கே அவரை எதிரியாக்கப் பார்த்தார்கள். இது எத்தனை பெரிய கயமைத்தனம்?

இப்போது மகாராஷ்டிராவில் அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு எதிராக தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி வருகிறார் பால் தாக்கரே மற்றும் அவரால் வளர்க்கப்பட்ட விஷ விருட்சமான ராஜ் தாக்கரே.

இன்னும் இப்படிப்பட்ட பண்பற்ற தலைவர்களின் பின்னால் லட்சக் கணக்கில் அணிவகுக்கவும், அவர்கள் சொல்லும்போதெல்லாம் போஸ்டர்களைக் கிழிக்கவும், சாணி அடிக்கவும் ஒரு கும்பல் தயாராக இருக்கிறது.
இந்தியா படித்தவர்கள் நிறைந்த நாடு என்று வெளியில் சொல்லிக் கொள்வதே எத்தனை வெட்கக்கேடான விஷயம்!

பண்பின் இருப்பிடம், கலாச்சாரங்களின் பிறப்பிடம், மக்களாட்சியின் தாயகம் என்று நம்மை நாமே சொறிந்து விட்டுக் கொள்வதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? விஞ்ஞானமும், நவீனத்துவமும் வளர வளர மக்களிடம் மனிதத்துவம் மறைந்து வக்கிரம் வளர்ந்ததுதான் மிச்சம்!

இத்தனை தாக்குதல்களுக்குப் பின்னும் ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்வதற்குப் பெயர் கோழைத்தனம் அல்ல... இன்னும் சற்றே மிச்சமிருக்கும் மனிதநேயம் அது!

No comments:

Post a Comment