Thursday, September 25, 2008

பார்வையற்ற ஒருவரின் சாதனையும் & தகவல் உரிமைச் சட்டம்

 

"நீ பார்வையற்றவன், உன்னால் ஒன்றும் செய்ய முடியாது, நீ கிராமத்தின் சுமை, அமைதியாக வீட்டில் உட்கார்ந்து இரு, உனக்கு கிராமத்தினர் சாப்பாடு போடுவர்' என்ற, பலரின் விமர்சனங்களை எல்லாம் பொய்யாக்கி சாதனை படைத் துள்ளார் பார்வையற்ற ஒருவர். அவரின் இச்சாதனைக்கு தகவல் உரிமைச் சட்டம் துணை புரிந்துள்ளது.

குஜராத், ராஜ்கோட் மாவட்டம் ரங்காரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்னாஜி. பார்வையற்றவரான இவர், எதையாவது சாதிக்க வேண்டும். தன்னால் கிராமத்தவர்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என, நினைத்தார். ஆனால், அவரின் முயற்சிக்கு கிராமத்தினர் யாரும் கை கொடுக்கவில்லை. அதற்கு மாறாக, மேற்குறிப்பிட்ட வாசகங்களை கூறி நோகடித்தனர். இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. ரத்னாஜிக்கு அவரின் சகோதரர் துணை புரிந்தார். தகவல் உரிமைச் சட்டம் பற்றி அறிந்த ரத்னாஜி, அதன்மூலம் தன் கிராமத்தில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, விண்ணப்பித்தார். அதில், "ரங்காரு கிராமத்தில், ஆழ்குழாய் கிணறுகள் போடப் பட்டுள்ளன. சாக்கடை வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன' என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட பணிகள் எதுவும் கிராமத்தில் நடக்கவில்லை. நடந்து முடிந்து விட்டதாக தவறான தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கென ஒதுக்கப்பட்ட பணம் எல்லாம் பதவியில் இருப்பவர் களால் அபகரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலை கிராமத்தினரிடம் தெரிவித்தார் ரத்னாஜி. உடன் அவர்கள் கொதித்தெழுந்தனர். ஊராட்சி உறுப்பினர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்க ஆரம்பித்து விட்டனர். இதிலிருந்து, கிராம வளர்ச்சிப் பணிகளில் எந்தளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்பதை மக்கள் அறிந்தனர். தற்போது, பார்வையற்றவரான ரத்னாஜியிடம் யோசனை கேட்பதோடு, அவருக்கு துணை நிற்கவும் துணிந்து விட்டனர். பொய் சொன்ன கிராமத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் துவங்கி விட்டனர்.

பார்வையற்றவரான ரத்னாஜி காட்டிய வழியை, குஜராத்தில் இன்று பல கிராமத்தினர் பின்பற்றத் துவங்கியுள்ளனர். "நான் பார்வையற்றவன் என்பதால், என்னை பலரும் குத்திக் காட்டிப் பேசினர். அதில், எவ்வளவு மனவருத்தம் அடைந்திருப்பேன் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கிராமத்தில் உள்ள சக்தி வாய்ந்த நபர்களுக்கு எதிராக என் நடவடிக்கையை துவக்கினேன். அப்போது தான் கிராமப் பணிகளில் ஊழல் நடந்திருப்பது தகவல் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது. மக்களும் உண்மையை அறிந்து கொண்டனர்' என்றார் ரத்னாஜி. ராஜ்கோட்டில் உள்ள தகவல் உரிமைச் சட்ட உதவி மையத்தைச் சேர்ந்த பங்கஜ் ஜோக் கூறுகையில், "ரத்னாஜியும், அவரின் சகோதரரும் எங்களிடம் வந்தனர். தகவல் உரிமைச் சட்டம் மூலம் ஊழலை வெளிக்கொணர முடியுமா என கேட்டனர். நாங்களும் முடியும் என்றோம். அவர்களின் கேள்விகளுக்கு விடை கிடைக்க நாங்கள் உதவி செய்தோம். நல்ல பலன் கிடைத்துள்ளது' என்றார்.

No comments:

Post a Comment