லேமேன் வீழ்ச்சி... திவாலாகிவிட்ட லேமேன் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தின் சில பிரிவுகளை மட்டும் 1.75 பில்லியன் டாலருக்கு வாங்க பிரிட்டனின் மாபெரும் வங்கியான பர்க்லேஸ் முன் வந்துள்ளது.
உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான லேமேன் பிரதர்ஸ் (Lehman Brothers Holdings) நேற்று முன் தினம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துவிட்டது.
லேமேன் பிரதர்ஸ் நிறுவனம் பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடன் வழங்க தந்த பணம் 613 பில்லியன் டாலர்கள் ஆகும். ஆனால், இந்தப் பணம் திரும்பி வரவில்லை.
இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற குறைந்தபட்சம் 60 பில்லியன் டாலர்களாவது உடனடியாதத் தேவை என்ற நிலையில், யாரும் முதலீடு செய்ய முன் வராததால் மஞ்சள் நோட்டீஸ் தந்துவிட்டது.
பவேரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து 1850ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர் ஹென்ரி லேமேன், இமானுவேல் லேமேன், மேயர் லேமேன் சகோதரர்கள்.
இந்த நிறுவனம் ஆரம்பித்த முதல் வர்த்தகம் பருத்தி வியாபாரம் தான். அடுத்ததாக புரோக்கரேஜ் உள்ளிட்ட துறைகளில் இறங்கியது.
அடுத்து அமெரிக்காவின் ரயில் பாதையை அமைக்கும் திட்டத்துக்கே நிதியுதவி செய்யும் நிலைக்கு இந்த நிறுவனம் உயர்ந்தது. அமெரிக்கா சந்தித்த மிகப் பெரும் பொருளாதார சவால்களை எல்லாம் கூட தாக்குப்பிடித்தது இந்த நிறுவனம்.
கொடுத்த கடனில் மூழ்கி...
இதுவரை நஷ்டத்தையே பார்த்திராத இந்த நிறுவனம், இப்போது தான் கொடுத்த கடன்களிலேயே மூழ்கிப் போய்விட்டது.
மெரில் லின்ஜ் நிறுவனமும் இதே போன்ற நஷ்டத்தை சந்தித்தாலும் கூட, ஒரேயடியாக மூழ்கும் முன்பே அதை பேங்க் ஆப் அமெரிக்காவிடம் 50 பில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு தப்பிவிட்டது.
ஆனால், லேமேன் நிறுவனம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கவில்லை. இந்த நிறுவனத்தை வாங்க பர்க்லேஸ் வங்கி முன் வந்தது. ஆனால், அவர்கள் சொன்ன விலையைப் பார்த்துவிட்டு பர்க்லேஸ் ஓடிவிட்டது.
இப்போது திவால் ஆகிவிட்ட லேமேன் நிறுவனத்தின் மதிப்பு முழுமையாக சரிந்துவிட்டதால் அதை அடிமாட்டு விலைக்கு வாங்க திரும்பி வந்துள்ளது பர்க்லேஸ் வங்கி.
இப்போது இந்த நிறுவனத்தின், அதிகம் நஷ்டத்தை சந்திக்காத சில பிரிவுகளை மட்டும் 1.75 பில்லியன் டாலருக்கு வாங்க பர்க்லேஸ் முன் வந்துள்ளது. இதனால் லேமேன் பிரதர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 10,000 பேருக்கு வேலை தப்பிவிடும் எனத் தெரிகிறது.
40,000 வேலைகள் பறிபோகும்...
ஆனால், லேமேனின் பெரும்பாலான பிரிவுகள் மூடப்படுவது நி்ச்சயமாகிவிட்டதால் சுமார் 40,000 பேர் வேலைவாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படும்.
மும்பையில் 2,500 ஊழியர்கள்..
இதில் லேமேனின் மும்பை அலுவலகத்தைச் சேர்ந்த 2,500 பேரும் அடக்கம். இதில் பெரும்பாலானவர்கள் லேமேனின் பிபிஓ பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர, லேமேன் நிறுவனத்தின் பல நாட்டு அலுவலகங்களில் பெரும் அளவில் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களது வேலைகளும் பறிபோகவுள்ளது.
ஐஐஎம் பட்டதாரிகள்...
இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் பல்வேறு ஐஐஎம்கள் மற்றும் முன்னணி கல்வி நிலையங்களில் படித்தவர்கள். கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆண்டுக்கு சில கோடி ஊதியத்தில் பணியில் உள்ளவர்கள்.
ஐஐஎம் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க நிதி நிறுவனங்களில் தான் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் வரும் ஆண்டுகளில், ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்துவது பெருமளவில் குறைந்துவிடும் என்றும் தெரிகிறது. அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படாத வரை இந்த நிலை தொடரலாம்.
சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அடி...
இதைத் தவிர இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் புதிய சிக்கல் முளைத்துள்ளது. நெருக்கடிக்கு ஆளாகிவிட்ட லேமேன், மெரில் லின்ஜ், ஏஐஜி ஆகிய சர்வதேச நிதி-இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குத் தேவையான சாப்ட்வேர்களை சத்யம், விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
இப்போது இந்த நிறுவனங்களே கரைந்துபோய்விட்ட நிலையில், இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படும் எனத் தெரிகிறது. மேலும் இந்த நிறுவனங்களுக்காக வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் பணியமர்த்தப்பட்ட டீம்கள் கலைக்கப்படலாம். இந்த டீம்களின் ஊழியர்களை வேறு பிரிவுகளுக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் மாற்றியாக வேண்டும்.
இந்திய சந்தையில் ரூ. 2,000 கோடி கரைந்தது...
இன்னொரு சிக்கலும் உள்ளது. லேமேன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையிலும், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகளிலும் ரூ. 2,000 கோடி வரை முதலீடுகளைச் செய்துள்ளன. இந்த முதலீடுகள் இப்போது காற்றோடு கரைந்துவிட்டன. இந்த முதலீடுகளுக்கு இப்போது எந்த மதி்ப்பும் இல்லை. இதனால் இந்த முதலீடுகளைப் பெற்ற நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளன.
ஐசிஐசிஐ...
குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி. லேமேன் முதலீட்டைப் பெற்றுள்ள இந்த வங்கியின் இங்கிலாந்து கிளைக்கு 80 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நஷ்டம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், ஐசிஐசிஐயின் ஒட்டுமொத்த லாபத்தோடு ஒப்பிடுகையில் இதெல்லாம் பெரிய நஷ்டம் இல்லை என்கின்றனர்.
ரிசர்வ் வங்கி கிடு்க்கிப்பிடி...
இதற்கிடையே லேமேன் நிறுவனத்தின் இந்திய கிளைக்கு இந்திய ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் தனது அனுமதியில்லாமல் எந்தவிதமான பங்குச் சந்தை நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என ஆர்பிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!!
Self-respect & sense are fruit of discipline!!
Friday, September 26, 2008
கொடுத்த கடனில் மூழ்கிய லேமேன் வீழ்ச்சியும்.. இந்திய அதிர்ச்சியும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment