Friday, September 26, 2008

சேவையே வாழ்க்கையாக


போலியோவால் கால்களை இழந்தவர் மக்களுக்கு சேவை செய்து வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த தொண்டு உள்ளம் 22 ஆண்டுகளாக தொடர்ந்து சேவையையை வாழ்க்கையாக கொண்டு வாழ்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியர் பூலியப்பன். இவரது மகன் இருதாலய மருதப்ப பாண்டியன். போலியோவால் இரண்டு கால்களும் ஊனமடைநதன. தனது ஊனத்தை பொருட்படுத்தாமல் உத்வேகத்தோடு தானும் வாழ்ந்து சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள பாண்டியன் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர். அரசு நலத்திட்டங்கள், சுகாதாரம் மருத்துவம் உள்பட படிக்காத மக்களுக்கு விளக்கி அவற்றை மக்கள் பெறவும் உழைத்து வருகிறார்.

350 பேருக்கு குடும்ப அட்டைகள், வீராணத்தில் 150 வீட்டு மனைப்பட்டா, அந்த வீடுகளை கட்ட கடனுதவியும் பெற்றுத் தந்துள்ளார். சுமார் 150 பேருக்கு முதியோர் உதவித் தொகை, ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகைகளை பெற்றுத் தந்துள்ளார். தொழில் தொடங்குவோருக்கு கடனுதவிகளை பெற்றுத் தந்துள்ளார்.
பள்ளிகளில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பேரணி நடத்துவது, அறிவொளி இயக்க கல்வி திட்ட விழிப்புணர்வு பேரணிகளை நடத்தியுள்ளார். அச்சங்குன்றம் கிராமத்திலிருந்து ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் வரை சுமார் 12 கிமி தூரத்திற்கு பேரணி நடத்தியது அவருக்கு மக்களிடம் பாராட்டை பெற்றுத் தந்தது.

அப்பகுதி மக்களுக்காக தாலுகா அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சகல அலுவலகங்களுக்கு ஊர்ந்து சென்றே சலுகைகளை பெற்றுத் தந்துள்ளார். முதியோர் கல்வி, அறிவொளி இயக்கம் போலியோ விழிப்புணர்வு பேரணி போன்றவற்றில் கடந்த 22 ஆண்டுகள் ஊதியமும் இன்றி தொண்டாற்றி வருபவர்.

பல்வேறு சமூகத் தொண்டுகள் சத்தமில்லாமல் விளம்பரமின்றி செய்து வருகிறார் பாண்டியன். தனது கிராமம் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களுக்கு சாலை, பஸ், குடிநீர் வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து பெற்று தந்துள்ளார்.

இவரது சேவைகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர், ரோட்டரி கிளப் போன்ற பல்வேறு அமைப்புகள் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர். தற்போது பிராணிகள் நலவாரிய உறுப்பினராகவும் பசுக்கள் பாதுகாப்பு சங்கம் (திருநெல்வேலி-கன்னியாகுமரி) செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

பசுக்கள் பாதுகாப்பு கோசாலை அமைத்தல், வயதான கால்நடைகளை பராமரித்தல், சாண எரிவாயு கலன் அமைத்தல், மருந்துகள் தயாரிப்பு, இயற்கை விவசாயம் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

2002ம் ஆண்டு திருநெல்வேலி சமூக மேம்பாட்டு அறக்கட்டளையை நிறுவி பல்வேறு சேவைகள் செய்து வருகிறார். அறக்கட்டளை மூலம் கோவில்களில் இருந்து தானமாக பெறப்பட்ட கால்நடைகளை சுமார் 300 விவசாயிகளுக்கு பிராணிகள் நலவாரிய விதிகளுக்கு உட்பட்டு ஒப்பந்தத்தின்படி தானமான வழங்கியுள்ளார்.
தனது நீண்டகால கனவான முதியோர் இல்லம், ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம் போன்றவற்றை உருவாக்க ஏற்பாடு செய்து வருகிறார். சேவையால் மக்கள் மனங்களை வென்ற இவரது சேவையை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு உதவிகளை செய்ய வேண்டும் என்று ஆலங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்....

No comments:

Post a Comment