Thursday, June 24, 2010

அரசியல் சாயம் இல்லை: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு

சென்னை: நடப்பது தமிழ் மாநாடு, இதில் தமிழுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதால், திமுகவின் கட்சிக் கொடிகள் முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளன.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் 24, 25ம் தேதிகளில் கோவைக்கு சென்றிருந்தார். பொதுவாகவே முதல்வர் கருணாநிதி எந்த நிகழ்ச்சிக்குச்சென்றாலும், அது கட்சி நிகழ்ச்சியானாலும் சரி, பொது நிகழ்ச்சியானாலும் சரி, அரசு விழாவானாலும் சரி திமுக கொடிகளும் தோரணங்களும் பளபளக்கும்.

உலகத் தமிழ் மாநாட்டுக்காக இரு தினங்கள் முன்கூட்டியே, முதல்வர் கருணாநிதி கோவைக்கு வந்திருந்தபோதும் திமுகவினர், வழி நெடுகிலும் திமுக கொடியை பறக்கவிட்டும், தோரணங்கள், கட்டவுட்டுகள், பேனர்கள் அமைத்தும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால், அதைப் பார்த்து முதல்வர் மிகுந்த அதிருப்தி அடைந்தார். தமிழ் மொழிக்காக நடத்தப்படும் மாநாட்டுக்கு கட்சி சாயம் பூசக்கூடாது என்பதில் கருணாநிதி மிக உறுதியாக இருந்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட்டுவிட்டு சென்னைக்கு வந்தவுடன், இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர், கோவை மாநகர் முழுவதும் திமுக கொடி பறக்கவிட்டது குறித்து தனது வருத்தத்தையும் தெரிவித்தார். அந்த அறிக்கையில், "கோவை விமான நிலையம் தொடங்கி, வ.உ.சி. மைதானம் வரை மாநகரின் பல்வேறு இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள், பதாகைகள், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பொறுப்பேற்றுச் செயல்பட்டுக்கொண்டிருப்போரின் உருவங்கள் தாங்கிய பேனர்கள்', தெவிட்டிப் போகும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்தன.
இதே காட்சியை முதல் நாளே, கோவை மாநகருக்குச் சென்ற துணை முதல்வர் தம்பி மு.க.ஸ்டாலினும் கவனித்துக் கண்டித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில் தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழக அரசால் நடத்தப்படவிருக்கிற மாநாடே தவிர, அது எள்ளின் முனையளவும் கூட கட்சி மாநாடாக காட்சி அளித்துவிடக்கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறேன். கழகக் கொடிகள், பதாகைகளுக்குப் பதிலாக, பொது மக்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்படாத வகையில்-சங்க இலக்கியக் காட்சிகள் அடங்கிய பேனர்கள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலச்சினை தாங்கிய பதாகைகள், பழங்கால மன்னர்களின் படங்கள் போன்றவற்றை அமைக்க வேண்டும். அதுவே எனக்கு மட்டுமல்லாமல் மாநாட்டுக்கு வரக்கூடிய மக்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நிறைவு அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படவேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

கொடிகள்
அகற்றம்!:
கருணாநிதியின் உத்தரவுக்கு இணங்க, இப்போது கோவை மாநகரில் எந்த இடத்திலும் திமுக கட்சிக் கொடியைக் காண முடியவில்லை. வழக்கமாகப் பறந்த இடங்களில் கூட அகற்றப்பட்டுள்ளன.
அரசியல் சாயம் பூசப்படாமல் முழுக்க, முழுக்க செம்மொழியாம் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழை முன்னிலைப்படுத்தி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழுக்கு
பெருமை சேர்க்கும்...
கோவை நகரில் எங்கு பார்த்தாலும் தமிழ் மொழியின் பெருமை, வரலாற்றை பறை சாற்றக் கூடிய வகையில், பழங்கால இலக்கிய காட்சிகளுடன் தமிழை மட்டுமே முன்னிலைப்படுத்தியதற்கான காட்சிகளை மட்டுமே காணமுடிகிறது. கோவை மாநகரம் முழுக்க தமிழ் மணம் கமழுகிறது.
தமிழர் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் விசேஷம் போல மக்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விசாரித்தும் பங்களித்தும் வரும் வகையில் இணக்கமான சூழல் நிலவுகிறது. இதற்குக் காரணம் கருணாநிதியின் இந்த உத்தரவுதான் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

No comments:

Post a Comment