Thursday, September 25, 2008

இதயம் கொடுத்த ஹிதேந்திரன் - தானம் செய்வோம்

 

கண்ணிமைக்கும் நேரத்திற்குள்ளேயே அந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது. பால் மணம் மாறாத 16 வயதினிலே ஹிதேந்திரன் விட்டுச்சென்ற இதயம் இந்த நேரம் ஒரு குழந்தையின் நெஞ்சுக்குழிக்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

இந்த செய்தியை தினகரன் நாளிதழில் படித்தபோது நெஞ்சம் கொஞ்சம் கணத்துப்போனது.

image

"...தாய் தந்தையருக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற மகன் விபத்தில் சிக்கினான். மூளை  செயல் இழந்ததால் அவனைக் காப்பாற்ற முடியாத நிலை. என்ன செய்வார்கள் பெற்றோர்கள்?

ஹிதேந்திரனின் பெற்றோர் உடனே முடிவு செய்தனர். மகனின் துடிக்கும் இதயத்தை, இன்னொரு உடலில் துடிக்கவைக்க.

ஒளிவேகத்தில் அம்மாணவனின் இதயத்தை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்தார் காவல்துறையைச் சேர்ந்த ஓட்டுநர்.

அங்கே காத்திருந்த மருத்துவர் குழு வேகமாக செயல்பட்டு, அந்த இதயத்தை நோயாளி ஒருவருக்குப் பொருத்தி மறுவாழ்வு அளித்தது.

இது நடந்தது சென்னையில். திருக்கழுகுன்றத்தில் வீடு, கிளினிக் என்று இருக்கும் மருத்துவ தம்பதிகளான அசோகன், புஷ்பாஞ்சலியின் மூத்த மகன் ஹதேந்திரன்(16) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு பயின்று வந்தான்.

அன்று சனிக்கிழமை (20/09/08)… பெற்றோருக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பனைப் பார்க்க கிளம்பினான் ஹிதேந்திரன். வீட்டுக்குத் திரும்புகையில், வீட்டிற்கு மிக சமீபத்தில் மீன்பாடி வண்டி ஒன்றில் தொங்கிய கம்பி ஒன்றில் இடிபட்டு, அதே வண்டியில் மோதி கீழே விழுந்தான். தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் ஆறாக ஓடியது. அவனோ மயக்கமானான்.

அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதுடன், வீட்டிற்கும் தகவல்கொடுத்தனர். தந்தை அசோகன் மருத்துவமனைக்கு விரைந்தார். ஹிதேந்திரா கடைசிவரை விழிக்கவில்லை.

சென்னை தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு ஹிதேந்திரன் கொண்டுவரப்பட்டான். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அடிபட்ட அதிர்ச்சியயில் ஹிதேந்திரனின் மூளை செயலிழந்து விட்டதாகவும் இனியும் செயல்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினர்.

மருத்துவ தம்பதிகள் என்பதால உடனடியாகப் புரிந்து கொண்டனர் அவனுடைய பெற்றோர். அவனுடைய உடலுறுப்புகளை தானமளிக்க முன்வந்தனர்.

நேற்று காலை ஹிதேந்திரனின் கண்கள், இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. கண்கள் சங்கர நேத்ராலயாவிற்கு அனுப்பப்பட்டது. கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

ஹிதேந்திரனின் இதயம் மேலே சொன்ன வேகத்தில் ஜெ.ஜெ. நகரில் உள்ள் செரியன் இதய மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டு, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சேர்ந்த ஒன்பது வயது தமிழ்ச் சிறுமிக்கு பொருத்தப்பட்டது. இந்த மனிதநேயத்துக்கு காவல்துறை பக்கபலமாகச் செயல்பட்டது.

ஹிதேந்திரன் என்ற சொல்லுக்கு இதயத்தை கொள்ளை கொள்பவன் என்று அர்த்தமாம்..."

இந்த நேரத்தில் எல்லோருடைய இதயத்தையும் கொள்ளை கொண்டவர்கள் ஹிதேந்திரனின் பெற்றோர்கள் அசோகன் மற்றும் புஷ்பாஞ்சலி தான். ஒரு தாய் எப்போது மகிழ்ச்சி அடைவாள் என்றால்... பிறர் தன் மகனை சான்றோன் என்று கூறும் போது தான். ஆனால் இந்த கலி காலத்தில் சான்றோன் என்ற சொல்லே கடலில் கரைத்த பெருங்காயமாய் மறைந்து போனது. இப்போது வாழும் போது பிறர்க்கு உதவி செய்யும் மகான்களை விட சாகும் போதும் இந்த உலகிற்கு எதையாவது விட்டுச்செல்லும் மனதர்கள் மேலானவர்கள்.

உதவி என்பது எல்லா காலத்திலும் எல்லாராலும் செய்யமுடியாது. அதைவிட இதயத்தை கொடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. குறிப்பாக சராசரி மனிதர்கள் மரணப்படுக்கையில் தன் உறவினர் இருந்தாலும் கூட அவரை கடைசி நிமிடம் வரை பார்க்கத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஹிதேந்திரனின் பெற்றோர் தன் மகன் மூளை செயல் இழந்து விட்ட நிலையில் இன்னொரு உடலில் அவன் இதயமாவது துடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களே.... அவர்களை போன்ற மனிதர்கள் ஊருக்கு நாலு பேராவது வேண்டும். சிறுநீரகங்கள்.... கண்கள், நுரையீரல், கல்லீரல் என அத்தனை உடலுறுப்புகளையும் பிறருக்கு வழங்கியது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

பகவத்கீதையை நம்புகிறோமோ இல்லையோ அதில் கூறப்பட்ட வாசகம் உண்மையானது.

"எதை நீ கொண்டு வந்தாய் இழப்பதற்கு?"

இழப்புக்கள் ஒரு புறம் இருந்தாலும் எதையாவது விட்டுச்செல்வோம்.

  • ஹித்தேந்திரனை போல இதயத்தை கொடுக்க முடியாவிட்டாலும் கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை தானம் கொடுக்க முன்வருவோம். அது இறப்பிற்கு உங்களை உலகத்தை பார்க்க வைக்கும்.
  • ஒரு சொட்டு குருதியை பிறருக்கு அளித்தாலும் உங்கள் ரத்தம் ஓடும் மனிதர்கள் உங்களை பார்க்கும் போதெல்லாம் வாழ்த்துவார்கள்.
  • இருக்கும் போது ரத்த தானம் செய்வோம். இறந்த பின்
    உடல்தானம் செய்வோம்.

No comments:

Post a Comment