Friday, September 26, 2008

இந்திய பணவீக்கமும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும்

image

ணவீக்கம் பற்றிப் பேசினால் எங்கே பாய்ந்துவந்து கன்ன வீக்கத்தை உண்டாக்கிவிடுவார்களோ என்று பயமாய் இருக்கிறது. இந்திய சாமான்யனின் உதடுகளும் உச்சரிக்கும் கொடூரமான வார்த்தைப் பிரயோகமாக பணவீக்கம் பேசப்படுகிறது. அதனால் கொஞ்சம் சுற்றி வந்து மூக்கைத் தொடலாம்.

ஆட்சிக்கு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இடதுசாரிகளுக்கு பதிலாக முலாயம் சிங்கை முட்டு கொடுத்து விட்டு ஜி-8 மாநாடு நடக்கும் ஹொக்கைடோவுக்கு விமானம் பிடித்த பிரதமர் மன்மோகன் சிங், ஜார்ஜ் புஷ்சை சந்தித்துப் பேசினார். நான்கு வருடங்கள் ஆட்சியைத் தாங்கிப்பிடித்த இடதுசாரிகளை கைகழுவிவிட்டு வேகவேகமாக ஜார்ஜ் புஷ்ஷுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசவேண்டிய அவசியம் பிரதமருக்கு ஏன் வந்தது?

அங்கேதான் அரசியல் சூட்சுமமும், மறைமுக மாட்சிமையும் அடங்கியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்க்கு நமது பிரதமர் கொடுத்த வாக்குறுதியோ அல்லது ஜார்ஜ் புஷ் தம் மனதுக்குள் வைத்திருக்கும் வைராக்கியமோ ஏதோ ஒன்றை காப்பாற்ற வேண்டியே நமது பிரதமரும் காங்கிரஸ் கட்சியும் பறப்பது போல் தெரிகிறது.

அமெரிக்காவிற்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் அளவுக்கு கடந்த தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காப்பாற்றியுள்ளதா?

இத்தனைக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அணுசக்தி ஒப்பந்தம் குறித்து எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. அதுபற்றிய எந்தக் கேள்வியும் அப்போது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தான் இந்த அணுசக்தி பிரச்னை இந்திய அரசியலில் அணுகுண்டு வீசத் தொடங்கியது. அப்போதிலிருந்தே இடதுசாரிகள் அதை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் ஆட்சியைக் காலி பண்ணி விடுவோம் என்று மிரட்டியே வந்தனர். காங்கிரசும் நாளை கடத்தி வந்தது. இப்போது எல்லாவற்றிற்கும் முடிவு தெரிய வரப்போகிறது.

ஜூலை எட்டில் ஜி-8 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பாரதப் பிரதமர் அதற்கடுத்த நாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசியிருக்கிறார். பேசட்டும், யாரும் வேண்டாம் என்று கூறவில்லை.

இப்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தே தீரவேண்டிய இக்கட்டான நிலைக்கு மத்திய, மன்மோகன் சிங் அரசு தள்ளப்பட்டிருக்கிறது.

அணுசக்தி ஒப்பந்தத்தால் நாட்டுக்கு நன்மைதான் என்றே வைத்துக்கொண்டாலும் பழைய நண்பர்களை மறந்து, நட்பைத் துறந்து, அதனால் ஆட்சியை இழந்தாலும் அல்லது இடதுசாரிகளுக்கு பதில் மூன்றாம் அணியைச் சேர்ந்த (முலாயம் சிங்கின்) சமாஜ்வாடி கட்சியின் ஆதரவோடு ஆட்சியை தக்கவைத்துக்கொண்டாவது அந்த அணுசக்தி ஒப்பந்தம் போடுவோம் என்ற காங்கிரசின் பிடிவாதத்திற்கு பின்னணிதான் என்ன என்பதுதான் சர்ச்சைக்குரிய கேள்வியே.

இந்திய நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்கும், பணவீக்க பயங்கரத்திற்கும், பங்குச்சந்தை சரிவுக்கும் மறைமுக காரணம் அமெரிக்காவாக இருக்குமோ என்ற சந்தேகம் இங்கே ஏற்பட்டிருக்கிறது.

இப்படி எண்ண காரணம் இல்லாமல் இல்லை.

இந்திய தேசத்தின் வீங்கிப்போன பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதும், பொருளாதார தேக்கத்தை சீரமைக்கவும் அமெரிக்காவுடனான இந்திய அணுசக்தி ஒப்பந்தம்தான் ஒரே வழி என கூறப்படுகிறது.

அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் தேவை என்கிறது காங்கிரஸ். இது விஷயத்தில் அமெரிக்காவுடன் கைகோர்ப்பதில் உறுதியாக இருக்கிறது. அதற்கு வலுவான காரணமாக நாளைய இந்தியாவின் எரிசக்தி தேவையை எண்ணிப்பார்க்கச் சொல்கிறது.

அமெரிக்கா என்றாலே வேப்பங்காயாக கசக்கும் இடதுசாரிகள், நாளைக்குக் கிடைக்கப்போகும் பிசாத்து 6 சதவிகித மின்சார பலனுக்காக நாட்டைக் கொண்டுபோய் அமெரிக்காவிடம் தத்துக் கொடுப்பதா, அதற்கு அடிமை சாசனம் எழுதித்தருவதா, நாட்டின் பாதுகாப்பை, இறையாண்மையை அடகு வைப்பதா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, எதிர்க்கிறார்கள்.

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நமது பிரதமர், ஜார்ஜ் புஷ்ஷுடன் அங்கே பேசிக்கொண்டிருந்த அதே சமயம் இங்கே குடியரசுத்லைவர் பிரதிபா பாட்டீலைச் சந்தித்து தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர் இடதுசாரிகள்.

ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். இந்த அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சு கிளம்பிய கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் நாட்டில் அபரிதமான பணவீக்கமும், அந்நிய முதலீடுகள் திரும்ப பெறப்படுதலும் நிகழ்ந்துள்ளன.

அணுசக்தி ஒப்பந்திற்கு எதிரான இடதுசாரிகளின் எதிர்ப்பு என்பது அமெரிக்காவின் கெளரவத்தை குலைக்கும் ஒன்றாகவே இருப்பதை அவர்கள் பார்வையில் இருந்து பார்த்தால் புரியும்.

பணவீக்கம் பற்றி பேசினால் நமது நிதி அமைச்சர் ப. சிதம்பரமோ, பிரதமர் மன்மோகன் சிங்கோ சரியான பதிலை கூறுவது இல்லை.

அவர்களுக்கு தெரிந்த இரண்டு காரணங்களில் ஒன்று, கச்சா எண்ணெய் விலையேற்றம். மற்றொன்று, உலக அளவிலான விலைவாசி உயர்வு.

இதுகுறித்து சி.என்.என்., ஐ.பி.என். சேனலின் கரண் தப்பார், ப. சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களே வெளிவந்தன.

நமது நிதி அமைச்சர் கூறுவதுப்போல் இது உலக அளவிலான பாதிப்பு என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள பணவீக்கம் இந்தியாவைப் பொறுத்தவரையில் நூறு சதவிகித உயர்வு எனப்படுகிறது.

பணவீக்கத்தைப் பொறுத்தவரை நம்மை விட அதிக பணவீக்கம் காணப்படும் நாடுகளான ஜிம்பாவ்வே, இலங்கை, ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றை நம் நாட்டோடு எப்படி பொருத்திப் பார்ப்பது? அங்கெல்லாம் போராட்டங்களே வாழ்க்கையாக இருப்பது யாருக்கும் தெரியாது என்று நமது அரசியல்வாதிகள் நினைக்கிறார்களா?

இதற்குப் பின்னணியில் அமெரிக்காவின் கரம் இருக்குமோ என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது. இந்தியா உடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு கிட்டதட்ட அமெரிக்கா நெருக்கடியையும் நிர்பந்தத்தையும் செய்துகொண்டிருக்கிறது.

இன்றைக்கு தெற்காசியாவில் வளர்ந்துகொண்டிருக்கும், நாளை  வல்லரசாக மாறக்கூடிய வல்லமை வாய்ந்த, ஒரே ஒரு ஜனநாயக (அமெரிக்காவைப் போல) நாடான இந்தியாவுடன் இந்த அணுசக்தி ஒப்பந்ததை நிறைவேற்றிக்கொள்வது என்பது, தனது பதவியை விட்டு கூடிய விரையில் இறங்கப் போகிற அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிற்கு வரலாற்று பதிவாகவே மாறக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

இந்திய தேசத்திற்கு உதவுவதுப்போலவும் இருக்கும், தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும் என்பதே அமெரிக்காவின் திட்டம் என்போரும் உண்டு.

மீண்டும் பணவீக்கம் பக்கம் திரும்புவோம்.

அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதில் தாமதம் மற்றும் தடை என்றதும் அமெரிக்காவின் ஆளுமைத் தன்மை பொங்கி எழுகிறது. இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் புழங்கும் அந்நிய முதலீட்டில் பெரும்பங்கு அமெரிக்காவை சேர்ந்தவர்களின் பங்காகும். அணுசக்தி ஒப்பந்த தாமதத்தின் எதிரொலி நமது தேசத்தின் பொருளாதாரத்தில், பங்குச் சந்தையில் எதிரொலிக்கிறது எனலாம். அமெரிக்காவின் நிர்பந்தத்தால், அமெரிக்க முதலாளிகள் இந்தியாவில் செய்த முதலீடுகளை திரும்ப பெற்றுவருவதாகத் தகவல். அதன் தாக்கமே நமது பங்குச்சந்தையின் தள்ளாட்டம்.

பரவலாக கூறப்படும் கச்சா எண்ணெய் மீதான பழிக்கும் அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும். தன்னுடைய எண்ணெய்த் தேவைகளை  பூர்த்தி செய்து கொள்ளவும், தனது ஆளுமைச் சக்தியை  நிரூபிக்கவும் அமெரிக்கா செய்யும் காரியங்கள் உலக அளவில் விமரிசனத்துக்கு ஆளாகுபவை. தான் வாழ, உலக நாடுகளில் குழப்பம் விளைவிப்பதில் அமெரிக்காவை விஞ்ச வேறு யாரும் இன்னும் பிறக்கவில்லை.

இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களுக்குப் பின்னணியாக அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் இருப்பதை கவனிக்கவேண்டும்.

ஆட்சியே கவிழ்ந்தாலும் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் நிச்சயம் என்று ஆளும் காங்கிரஸ் பிடிவாதம் பிடிப்பதின் பின்னணி காரணம் நாட்டின் நலன் மட்டும்தானா?

இந்த அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் மட்டுமே பங்குச் சந்தை பழைய நிலைக்கு திரும்பும், பொருளாதார வீழ்ச்சியை, விலைவாசியைத் தடுப்பதும் சாத்தியம் என்பதும் இதற்குள் ஒளிந்திருக்கும் காரணமோ?

அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல் நழுவுகிறார்களோ?

ஒருவேளை அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதும் பணவீக்கம் குறைந்து, பொருளாதாரம் தலை நிமிர்ந்து, பங்குச்சந்தை ஒரு சமதளத்திற்கு வந்ததும் தேர்தலில் அதையே வெற்றி முழக்கமாக, ஓட்டுக் கேட்கும் காரணியாக நமது அரசியல்வாதிகள் கையாளக்கூடும்.

அப்போதுதான் நாமும் நமது கைவரிசையை காட்டவேண்டும்!

No comments:

Post a Comment