வவுனியா பகுதியில் அமைந்துள்ள மாணிக் பண்ணை அகதி முகாமில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள். தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த முகாமை ஐநா பொதுச்செயலர் பான் கி
நியூயார்க், மே 28: இலங்கையின் வடக்கில் தமிழர்களுக்கென்று அமைக்கப்பட்ட மிகப்பெரிய முகாமில் 3 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளும் உடனடியாக, பெரும் அளவில் தேவைப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு தெரிவிக்கிறது.
இப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஓச்சா இதை நியூயார்க் நகரில் புதன்கிழமை இரவு தெரிவித்தார்.
அகதிகள் முகாமில் உள்ளவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். ஏராளமானோர் தங்களுடைய உற்றார் உறவினரை இழந்துவிட்டனர். அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இருந்தால் எங்கே என்று தெரியாமல் மன உளைச்சலில் அவதிப்படுகின்றனர்.
போர்க்களத்தில் குண்டு காயம் அடைந்தவர்கள் மட்டும் அல்லாமல் மற்றவர்களும் ஒருவகையில் உடல் நலம் இல்லாமலேயே இருக்கின்றனர். மாதக்கணக்காக சரியான சாப்பாடு, தூக்கம் போன்றவை இல்லை என்பது முதல் காரணம். ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி, கை-கால் மூட்டு வீக்கம், சர்க்கரை வியாதி, சிறுநீரக் கோளாறு, பசியின்மை என்று பாதிக்கப்பட்டுள்ளனர். முகாமில் உள்ள பெண்களின் துயரங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
முதியவர்கள் தங்களுக்கு நேர்ந்த இன்னல்கள் கணக்கற்றவைகளாக இருந்தாலும் தங்கள் குடியில் பிறந்த இளைஞர்கள், யுவதிகள், சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பான, நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமே என்ற ஒரே ஆசையில், முகாமில் உள்ள அவல நிலைகளைப் பொருள்படுத்தாமல் உடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
அனைவருமே போர்க்களத்திலே மாதக்கணக்காக இருந்தனர். ராணுவத்தினரின் பீரங்கித் தாக்குதல் போர் விமானங்களின் குண்டுவீச்சுத் தாக்குதல் காரணமாக தங்களுடைய வீடு, வாசல், நில-புலன்களை போட்டது போட்டபடியே விட்டுவிட்டு கட்டிய துணியுடன் வெளியேறி பதுங்கு குழிகளிலும் கட்டாந்தரைகளிலுமாக மாறிமாறி வாழ்ந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்துள்ளனர். ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை கல் நெஞ்சையும் கரைய வைப்பதாய் உள்ளது.
முகாமில் இருப்பவர்களுக்கு மாற்றுத்துணி இல்லை, சாப்பிட பாத்திரங்கள் இல்லை, படுத்துக்கொள்ள பாய், தலையணை கிடையாது. போர்த்திக்கொள்ள போர்வை, சால்வை இல்லை.
முகாமில் கழிப்பறை, குளியலறை வசதிகள் போதுமானதாக இல்லை. குடிநீரும் மற்ற நீரும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. எனவே சுகாதாரமும் சீர்கெட்டுக்கிடக்கிறது. மருத்துவத் தேவைகளை ஓரளவுக்குத்தான் பூர்த்தி செய்யும் விதத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் சில மட்டுமே இருக்கின்றன.
இதுவரை முகாமுக்குச் செல்ல பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வாகனங்கள் நேரடியாகச் செல்ல அனுமதி தரப்படுகிறது. இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் வாகனங்கள் தங்களுடைய கொடிகள் இல்லாமல்கூட செல்லலாம் என்று ராணுவம் அனுமதிக்கிறது.
முகாமில் உள்ள தமிழர்களில் விடுதலைப் புலிகள் இருக்கின்றனரா என்று ஒவ்வொருவராகச் சோதித்த ராணுவம் இப்போது முகாமைவிட்டு வெளியேறி அருகிலேயே முகாமிட்டிருக்கிறது. இனி தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவிகளைச் செய்யலாம் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இத் தகவல்களை ஐ.நா.வின் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த ஓச்சா தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment