இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் 20 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா படையினரின் பீரங்கி மற்றும் துப்பாக்கி தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்திருக்கின்றது.
தமிழ் இனப் படுகொலைக்கான ஆதாரங்களை சிறிலங்கா அரசாங்கம் அழித்துவிட்டதாகவும் அதற்காகவே போர்ப் பகுதிக்குள் எவரையும் அனுமதிக்க சிறிலங்கா அரசாங்கம் மறுப்பதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் பேரழிவுக்கான பட ஆதாரங்களையும் 'த ரைம்ஸ்' நாளிதழ் வெளியிட்டிருக்கின்றது.
இது தொடர்பாக 'இலங்கை கடலோரப் பகுதிகளில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை தொடர்பான சிறிலங்கா அரசின் பச்சைப் பொய்யை அம்பலப்படுத்தும் படங்கள்' என்ற தலைப்பில் 'த ரைம்ஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜெனீவாவில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது சிறிலங்கா படையினர் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதை சிறிலங்கா குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
[படம்: த ரைம்ஸ்]
விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக நடத்தப்பட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் யாரையும் நாங்கள் கொல்லவில்லை என்றும், தமிழ் மக்களின் சாவுக்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்த நிலையில், 'த ரைம்ஸ்' நாளிதழ் சார்பில் தமிழ் மக்கள் படுகொலை குறித்து இலங்கையில் ஒரு வாரம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, இறுதிக்கட்ட போரில் 20 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறிலங்கா படையினரின் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு உயிரிழந்திருக்கின்றனர்.
இரகசியமான ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்கள் போர் நடைபெற்ற பகுதியில் இருந்து வெளியேறிய சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், போர்ப் பகுதி மீது உலங்குவானூர்தியில் பறந்தவாறு எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில் போர் வல்லுநர்கள் நடத்திய ஆய்வுகள் ஆகியவை இந்த படுகொலைக்கான சாட்சியங்களாக அமைந்துள்ளன.
இலங்கைப் போரின்போது அப்பாவித் தமிழ் மக்களின் புகலிடமாக இருக்க வேண்டிய பாதுகாப்பு வலயப் பகுதிகள் கொலைக்களமாக மாறியிருக்கின்றன.
இலங்கை போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கசியவிட்ட ஆவணங்களின்படி 2009 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் ஏறக்குறைய 7 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் மே மாதத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுவதற்கு அடுத்த நாளான 19 ஆம் நாள் வரை 13 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மே மாதத்தில் சிறிலங்கா படையினர் வீசிய குண்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டுள்ளது.
மே மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை முழுமையானதல்ல. இது மேலும் அதிகரிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
[படம்: த ரைம்ஸ்]
மே மாதத்திற்கு முன்பு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பற்றிய முழு ஆவணங்களையும் 'த ரைம்ஸ்' நாளிதழ் கைப்பற்றி பாதுகாப்பு வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்தது. அதில் சிறிலங்காப் படையினர் தரப்பில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களால்தான் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று
தெரியவந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் குண்டுவீச்சால் கொல்லப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில் உயிரிழந்தோரில் 64 விழுக்காட்டினர் சிறிலங்காப் படையினரின் குண்டுவீச்சுக்கு பலியானவர்கள் ஆவர்.
வேறு சிலரை விடுதலைப் புலிகளும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது மேலும் அதிகரித்தது.
இந்த இரு மாதங்களிலும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 129 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு வலயப் பகுதிகளிலும், அதற்கு வெளியேயும் விடுதலைப் புலிகளும், சிறிலங்காப் படையினரும் அமைந்திருந்த ஆயுத நிலைகள் குறித்த படங்கள் 3 பாதுகாப்பு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி பார்த்தால் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அப்பாவி தமிழ் மக்கள் எவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என்று
தெரியவந்துள்ளது.
[படம்: த ரைம்ஸ்]
ஒருவேளை விடுதலைப் புலிகளின் பீரங்கிகள் தவறான திசையில் வெடித்திருந்தால் எவரேனும் உயிரிழந்திருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை என்று முன்னாள் படை அதிகாரியும், பிரித்தானிய படை சார்பில் நடத்தப்படும் இதழின் ஆசிரியராக இருந்தவருமான சார்லஸ் ஹேமன் கூறியிருக்கிறார்.
இந்த உயிரிழப்புக்கள் அனைத்தும் சிறிலங்காப் படையினரால்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. வானில் வெடித்து தரையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பீரங்கி குண்டுகள் மூலம் சிறிலங்காப் படையினர் நடத்திய தாக்குதலில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கின்றது.
பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இதுபோன்ற பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவது 1949 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனீவா உடன்படிக்கையின் 3 ஆவது பிரிவின்படி போர்க் குற்றமாகும்.
இந்த உடன்படிக்கையில் சிறிலங்கா அரசாங்கமும் கையெழுத்திட்டுள்ளது. சிறிலங்கா படையிடம் 81 மில்லி மீற்றர் தொடக்கம் 120 மில்லி மீற்றர் வரை அகலமுள்ள பீரங்கி குண்டுகள் உள்ளன. இவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இவை வெடித்தால் மரங்கள் கருகி குச்சிகளாகிவிடும். ஆனால் இதுபோன்ற ஆயுதங்கள் எதுவும் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்றும் சிறிலங்கா படையின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மே மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. மே 13 ஆம் நாள் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலின் உக்கிரத்தால் அப்பகுதியில் சேவையாற்றி வந்த மருத்துவப் பணியாளர்களும், மனித நேயப் பணியாளர்களும் பதுங்குகுழிகளை விட்டு வெளியே வர முடியவில்லை.
இதனால் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மருத்துவ வசதியின்றி படுகாயங்களுடன் போராடினார்கள். பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளில் விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையில் பதுங்கியிருக்கலாம் என்பதால் அதன் மீதுதான் சிறிலங்காப் படையினர் தொடர்ந்து குண்டுகளை வீசித் தாக்கினார்கள்.
[படம்: த ரைம்ஸ்]
மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகள் எங்கு அமைந்துள்ளன என்ற விவரங்களை அதில் பணியாற்றும் மருத்துவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.
அவ்வாறு செய்தி தெரிவித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அந்த மருத்துவமனைகள் மீது சிறிலங்காப் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய கொடுமையும் அரங்கேறியிருக்கிறது.
பிற்குறிப்பு - 1
சாட்சியம் இல்லாத படுகொலைகள்
தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக சாட்சியமே இல்லாத போரை சிறிலங்கா அரசாங்கம் நடத்தி முடித்திருக்கிறது என்றும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவி தமிழ் மக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்தப் போருக்கு சாட்சியமே இருக்கக்கூடாது என்ற
எண்ணத்துடன் சிறிலங்கா அரசாங்கம் செயற்பட்டிருக்கின்றது.
போரின்போது என்ன நடைபெற்றது என்பதை வெளியில் சொல்வதற்காக யாருமே இருக்கக்கூடாது என்று சிறிலங்கா அரசாங்கம் கருதுகின்றது. போரின்போது காயமடைந்த மக்களுக்கு மருத்துவர்கள் 3 பேர் மருத்துவம் அளித்தனர். அவர்கள் மூலம் போரின் கொடுமைகள் வெளியுலகிற்கு தெரிந்துவிடும் என்பதால் அவர்கள் மூவரையும் பொய்யான செய்திகளைப் பரப்பியதாகக் கூறி சிறிலங்கா அரசாங்கம் கைது செய்து வைத்திருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி 'த ரைம்ஸ்' நாளிதழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் போரின்போது காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களின் கதி என்ன என்பதை கண்டறியும் பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள முகாம்களுக்குள் மனிதநேய அமைப்புகள் நுழையத் தடை விதித்திருப்பதால் அவர்களின் பணி மிகவும் சிக்கலாகியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கூறியதாகவும் 'த ரைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
[படம்: த ரைம்ஸ்]
பிற்குறிப்பு - 2
அம்பலப்படுத்தியது எப்படி?
போர் நடைபெற்ற பகுதிகளுக்குள் நடுநிலையான பார்வையாளர்கள் நுழைய சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், இலங்கை இனப்படுகொலை குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது எப்படி என்பதையும் 'த ரைம்ஸ்' நாளிதழ் விளக்கியுள்ளது.
போர்ப் பகுதிக்குள் நடுநிலையான பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் சென்றபோது, அவரின் உலங்குவானூர்தியில் 'த ரைம்ஸ்' நாளிதழின் செய்தியாளர்கள் சிலரும் சென்றனர். அவர்கள் வானில்
பறந்தபடியே பாதுகாப்பு வலயப் பகுதிகளைப் படம் பிடித்தனர்.
இவ்வாறு செய்த ஒரே பிரித்தானிய நாளிதழ் 'த ரைம்ஸ்' மட்டும்தான். அது மட்டுமின்றி உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மெனிக் பாம் முகாமுக்கு 'த ரைம்ஸ்' நாளிதழின் செய்தியாளர்கள் இரண்டு தடவை சென்றனர். அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் தங்களின் வேதனையை கண்ணீர் வாக்குமூலமாக தெரிவித்தனர் என்று 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல்களைக் கொண்டே இந்த செய்திக் கட்டுரை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் 'த ரைம்ஸ்' நாளிதழ் கூறியுள்ளது.
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை போரை சீனாவின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் செய்து முடித்திருக்கிறது. சீனாவின் முழு ஆதரவும் சிறிலங்காவுக்கு இருப்பதால் சிறிலங்கா மீது போர்க் குற்ற வழக்குத் தொடவோ விசாரணை நடத்தவோ வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.
எனினும் போரின்போது பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக சிறிலங்காப் படை உயரதிகாரிகள் மீது அனைத்துலக போர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்திருக்கின்றது.
Related article: http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6391265.ece