சர்வதேச அளவில் வசூலைக் குவித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்' (தமிழ்ப் பதிப்பு) திரைப்படம், உலகின் வடதுருவம் எனப்படும்.
இது ஆர்க்டிக் பிரதேசத்தின் த்ராம்ஸோ உலகப் படவிழாவில் (Tromso International Film Festival) இரு தினங்கள் திரையிடப்பட்டுள்ளது.
இதுவரை எந்த இந்தியப் படத்துக்கும் கிடைக்காத மிகப் பெரிய பெருமையாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. த்ராம்ஸோ என்ற நகரம் நார்வேயில் உள்ளது. வட துருவமான ஆர்க்டிக் வட்டத்துக்குள் வரும் பனிப் பிரதேசம் இது. உலகின் மிக தொலைதூரப் பிரதேசம் எனப்படும் இங்கு ஆண்டுக்கொருமுறை 6 தினங்கள் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா மிகப் புகழ் பெற்றது. இந்த விழாவில் தங்கள் படங்கள் திரையிடப்படுவதை பெரும் கவுரவமாகக் கருதுகிறார்கள் படைப்பாளிகள்.
பனிமலைகள் சூழ்ந்த வெட்ட வெளி 'ஸ்னோ தியேட்டரில்' திரைப்படம் பார்க்கும் அற்புத அனுபவத்துக்காக உலகெங்கிலுமிருந்து பார்வையாளர்கள் குவிகிறார்கள் த்ராம்ஸோவுக்கு. சராசரியாக 55 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான படங்கள் பங்கேற்கின்றன. 1995-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடக்கும் த்ராம்ஸோ சர்வதேசப் படவிழாவின் இந்த ஆண்டு பதிப்பு ஜனவரி 18-ம் தேதி துவங்கியது.
இந்த விழாவில் இந்தியப் படமாக பங்கேற்றது ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' மட்டுமே. அதுவும் இரண்டு தினங்கள் திரையிடப்பட்ட பெருமை 'எந்திரனுக்கு' மட்டுமே கிடைத்தது. ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்பட்ட 'எந்திரனை' விழாவில் பார்த்த சர்வதேச பார்வையாளர்கள் அசந்துபோய் பாராட்டினார்கள். குறிப்பாக சூப்பர் ஸ்டாரின் வசீகரமும் ஸ்டைலும் அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் ஷங்கருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது விழாவில். 'எந்திரனுக்கு' இந்தப் பெருமை கிடைத்ததில் முக்கியப் பங்கு ஐரோப்பிய வாழ் தமிழர் ஒருவரையே சாரும். அவர், 'எந்திரன்' படத்தை நார்வே மற்றும் ஸ்வீடனில் வெளியிட்ட வசீகரன் சிவலிங்கம்.
இந்த விழாவுக்கு பல இந்தியப் படங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், இறுதியில் தேர்வானது வசீகரனால் பரிந்துரைக்கப்பட்ட 'எந்திரனே'. இதுபற்றி வசீகரன் நம்மிடம் கூறுகையில், "தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் உலகில் பெரிய கவுரவத்தைப் பெற்றுத் தந்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த 'எந்திரன்' திரைப்படம். இது சாதாரண திரைப்பட விழா அல்ல. இந்த ஆண்டு 58000 பார்வையாளர்களுக்கும் அதிகமாகப் பங்கேற்றனர்.
நூற்றுக்கும் அதிகமான உலகப் படங்கள் வந்திருந்தன. பல இந்தியப் படங்களைப் பற்றி என்னிடம் தகவல் கேட்டறிந்த த்ராம்ஸோ திரைப்பட விழா குழுவினர், விழாவில் கடைசியில் திரையிட தேர்வு செய்த ஒரே படம் 'எந்திரன்'தான். ஓவர் ட்ரைவ் பிரிவில் 2 தினங்கள் (ஜனவரி 19 மற்றும் 20) திரையிடப்பட்டன. சரியான ரெஸ்பான்ஸ் பார்வையாளர்களிடமிருந்து. 'எந்திரன்' ஒரு நிஜமான சர்வதேசப் படைப்பு என்பதற்கான அங்கீகாரம் இது", என்றார்
நன்றி: http://www.viduppu.com
No comments:
Post a Comment