Sunday, October 26, 2008

கொட்டும் மழையில் ஒன்று திரண்டது தமிழினம் - 60 கி.மீ. நீளத்துக்கு மனிதச் சங்கிலி

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை 60 கி.மீ. நீளத்துக்கு மனிதச் சங்கிலி நடந்தது. கொட்டிய மழையில் உறுதி குலையாமல் தமிழ் மக்கள் மனிதச் சங்கிலியில் இணைந்து நின்றனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்சுமார் 4 மணிநேரம் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை நிறுத்தக் கோரி கடந்த 21ஆம் தேதியே இந்த மனிதச் சங்கிலி நடைபெறுவதாக இருந்தது. மழைக் காரணமாக 24ஆம் தேதிக்கு (நேற்று) அது தள்ளிவைக்கப்பட்டது. மனிதச் சங்கிலி தொடங்கிய பிற்பகல் 3.45 மணி அளவில் கொட்டத் துவங்கிய மழை 3 மணி நேரம் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது.

மழையைப் பொருட்படுத்தாமல் மனிதச் சங்கிலியில் மக்கள் ஒன்றிணைந்தனர்.

 

இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ள சிங்காரவேலர் மாளிகை அருகே முதல்வர் கருணாநிதி பிரமாண்டமான மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

காரில் சென்று பல்லாவரம் வரை பார்வையிட்டார்.
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை மனிதச் சங்கிலியை மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை, வடசென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வக்கீல்களுடன் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்து கொண்டார்.

அண்ணா சிலை முதல் கிண்டி வரை, மாணவர்கள் மற்றும் பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.அவர்களுடன் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி ஆகியோரும் பங்கேற்றனர்.

கிண்டி முதல் தாம்பரம் வரை, திரைப்பட துறையினர் மற்றும் தென் சென்னையை சேர்ந்தவர்களுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., தவிர பெரும்பாலான கட்சினரும், திரையுலகப் பிரமுகர்களும், பொதுமக்களும், அரசு ஊழியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இ.கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் எம்.பி., என். வரதராஜன், சரத்குமார், விஜய டி. ராஜேந்தர், கீ. வீரமணி, திருமாவேலன், ஆர்.எம். வீரப்பன் ஆகியோரும் இந்த மனிதச் சங்கிலியில் கலந்துகொண்டனர்.

மனிதச் சங்கிலியில் பங்ககேற்க வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்தித்த முதல்வர் கருணாநிதி கைகுலுக்கி தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டார்.

மேலும், இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோரும் தாங்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, இந்த மனிதச் சங்கிலியில பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் விசயத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளன. இதனை அடுத்து பல்வேறு கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த அடிப்படையில் சென்னையில் 60 கிலோ மீட்டர் நீளத்துக்கு மிகப் பெரிய பிரமாண்ட பேரணியை கடந்த 21 ந்தேதி நடத்த கலைஞர் கருணாநிதி திட்டமிட்டு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

21-ந் தேதி நடைபெறுவதாக இருந்த மனிதச் சங்கிலி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது. ஈழட் தமிழர்களுக்கு ஆதரவாக மனித சங்கிலிப் போராட்டத்தில் 'கொல்லாதே...கொல்லாதே ஈழத் தமிழர்களை கொல்லாதே...'என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அண்ணாசிலை வரை வட சென்னையை சேர்ந்தவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வக்கீல்கள் மனிதசங்கிலியில் அணிவகுத்து நின்றனர். இதில் மின்சார வாரிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்து கொண்டு மனித சங்கிலியை ஒருங்கிணைத்தார்.

கிண்டி முதல் தாம்பரம் வரை நடைபெற்ற மனித சங்கிலியை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மேற்பார்வையிட்டு அணிவகுப்பை ஒழுங்குபடுத்தினர். இதில் திமுக இளைஞர் அணி, தொழிலாளர் அணி, மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

அண்ணாசிலை முதல் கிண்டிவரை பள்ளி,கல்லூரி மாணவர்கள், பா.ம.க.வினர், தென் சென்னையை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அன்பகம் முதல் ஒய்.எம்.சி.ஏ. வரை தமிழ் திரை உலகைச் சேர்ந்த ஏராளாமான நடிகர் நடிகைகள், திரை உலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் இவர்களுடன் கை கோர்த்து நின்றனர்.

தாம்பரம் முதல் சிவானந்த குருகுலம் வரை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் திமுக பிரமுகர்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் மனிதச்சங்கலியில் பங்கேற்றனர். சிவானந்த குருகுலம் முதல் செங்கல்பட்டு வரை அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், எ.வ.வேலு ஆகியோர் மேற்பார்வையில் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மனிதச்சங்கிலியில் அணி வகுத்து நின்றனர்.

செங்கல்பட்டு முதல் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மனிதச் சங்கிலியில் அணி வகுத்து நின்றனர். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

மனிதச் சங்கிலி பேரணியில் கலந்து கொள்வதற்காக இன்று காலையில் இருந்தே கட்சி தொண்டர்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் சென்னை வந்து குவியத் தொடங்கினர். எப்பொழுதும் பரப்ரப்பாக் காணப்படும் சென்னை மாநகரம் தொண்டர்கள் வருகையால் திணறியது. மனிதச் சங்கிலியையொட்டி பிரதான சாலைகளில் பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டப்பட்டு மனிதச்சங்கிலி நடைபெறும் பகுதி முழுவதும் விழாக்கோலத்துடன் காணப்பட்டது.

பிரமாண்ட மனித சங்கிலி பேரணியால் சென்னை மாநகரமே குலுங்கியது. பேரணியை அடுத்து சென்னை நகரில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வாகன நெரிசல் காணப்பட்டது.

இன்றைய மனித சங்கிலி போராட்டம் , தாயகத் தமிழர்களின் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரிய மைல் கல்லாகவே கருதப்படுகிறது.

No comments:

Post a Comment