தீபாவளி...ஆஹா..இந்தப் பெயரைக் கேட்டவுடன் மனக் கண்களாலே வான வேடிக்கைகளை ரசிக்கிறோம்; நினைவாலேயே இனிப்புகளை ருசிக்கிறோம்!
தீய பாவங்கள் பலவற்றைச் செய்த கொடிய அரக்கனான நரகாசுரன், கிருஷ்ணபகவானால் அழிக்கப்பட்டு, மக்களின் இன்னல்கள் போக்கப்பட்ட தினம், ராமபிரான் தனது இலங்கை வனவாசத்தை முடித்துக் கொண்டு (ராவணனோடு கடும் போர்புரிந்து சீதா பிராட்டியாரை மீட்டுக் கொண்டு) அயோத்திக்கு திரும்பி வந்த தினம்...
இவ்வாறு தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து கொண்டாடும் தீபாவளி (தீப+ஆவளி - ஆவளி என்றால் வரிசை என்று பொருள்)
பண்டிகை, வெவ்வேறு காரணங்களைக் கொண்டு கொண்டாடப்பட்டு வந்தாலும், 'தீமைகள் ஒழிந்து; நன்மைகள் மலர வேண்டும்' என்ற சாரத்தைப் பறைசாற்றுவதாலேயே, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளும் தீபாவளியை எவ்வாறு கொண்டாடி வருகின்றனர் என்பதை பார்ப்போமே...
மொரீஷியஸ்
இந்தத் தீவில் உள்ள மக்கள் தொகையில் 63 சதவிகிதத்தினர் இந்தியர்கள்! இங்கே தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்றுச் சொல்ல வேண்டுமா என்ன? இந்தியாவில் கொண்டாடப்படும் முறைகளிலேயே சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ளது போன்றே, அதிகாலை துயிலெழுந்து, எண்ணெய்த் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, தீபங்களை ஏற்றித் தொழுது, உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளையும் வாழ்த்துக்களையும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து இங்கே தீபாவளி கொண்டாடப்படுகிறது.
நேபாளம்
இமாலயத்தால் கம்பீரமாக இருக்கும் இந்நாட்டில், வட இந்தியாவைப் போன்றே ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்றன. வானவேடிக்கைகளும், தீபங்களும் ஒளிரும் இப்பண்டிகை, செல்வங்களை அள்ளிக்கொடுக்கும் தெய்வமான லஷ்மியை வரவேற்பதற்காகவும் இங்கே கொண்டாடப்படுகிறது.
மலேசியா
வேற்றுமைகளில் இருப்பிடமாகத் திகழும் இந்நாட்டில், சுமார் 8 சதவிகித இந்தியர்கள் உள்ளனர். ஆனால், இந்நாட்டில் குடியேறிய வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்தியர்களுடன் இணைந்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றன. இப்பண்டிகையை 'ஹரி தீபாவளி' என்று அழைக்கும் மலேசியர்களில் பலரும், தென் இந்திய முறைப்படியே கொண்டாடுகின்றனர்.
இந்தோனேஷியா
இந்தோனேஷியாவில் உள்ள பாலி பகுதியில் கொண்டாடுப்படும் 'தீபாவளி' பிரசித்தி பெற்றவை. இப்பகுதியில் வசிப்போரில் பெரும்பாலானோரின் எண்ணிக்கையின் காரணமாக, இப்பண்டிகையின்போது 'பாலி'யில் இருந்தால் இந்தியாவில் இருக்கும் அனுபவமே அனைவருக்கும் கிடைக்கும்!
சிங்கப்பூர்
மதம் என்ற உணர்வு மறக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்படுவதே 'தீபாவளி'. இதற்கு மிகச் சிறந்த சான்றாகத் திகழும் நாடுதான் 'சிங்கப்பூர்'! நாடு முழுவது விழாக் கோலம் பூண்டிருக்கும் இந்நன்னாளில், 'குட்டி இந்தியா' என்றழைக்கப்படும் செரங்கூன் சாலைப் பகுதியில் கேட்கவே வேண்டாம்; மகிழ்ச்சியின் எல்லைக்கேச் சென்று விடலாம்.
ஆனால், இங்கே ஒரே ஒரு வேறுபாடுதான்! ஆம், வெடிக்கும் பட்டாசுகளுக்கு தடை (மாசுபாடு காரணமாக) விதித்திருப்பதால், வான வேடிக்கைக்களால் மட்டுமே தீபாவளி ஜொலிக்கும்.தமிழகத்தில் இருப்பது போன்றே பல்வேறு கோயில்கள் அமைத்திருக்கும் இந்நாட்டில், தீபாவளியையொட்டி விசேஷ பூஜைகளும் செய்யப்படுகின்றன.
தென் ஆப்பிரிக்கா
பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ள நாடுகளில் குறிப்பிடத்தக்கதே தென் ஆப்பிரிக்கா. இங்கு இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டடீர் இந்து மதத்தையே பின்பற்றுகின்றனர்.
இதன்காரணமாகவே, இந்தியாவில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்துக்கு இணையாக, தென் ஆப்பிரிக்காவிலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆஸ்திரேலியா
சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கும் ஆஸ்திரேலியாவில், தீபாவளி ஒரு முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனால், இப்பண்டிகையைக் கொண்டாடும் பலருக்கு ஒரு சில வருத்தம் இருக்கவே செய்யும். இந்திய பாராம்பரிய முறைப்படி செய்யப்படுகின்ற பூஜைக்குத் தேவையானப் பொருட்கள், இங்குக் கிடைப்பது சற்று அரிது. ஆயினும், நவீன முறையில் மகிழ்ச்சிக்குக் குறையின்றி இங்கே கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து
இந்தியர்கள் பெரும்பாலோனோர் வசிக்கும் இங்கிலாந்தில், அனைத்துப் பண்டிகைகளில் கூடுவதுபோன்றே தங்களுக்கான அமைப்பில் கூடி, விழாக்களைச் சிறப்பான வகையில் கொண்டாடுகின்றனர்.
இந்நன்னாளில் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு, தங்கள் பகுதிகளிலுள்ள லஷ்மி கோயிலுக்குச் சென்று வருவது வழக்கம்.
லண்டனில் 2007 ஆண்டில் 30000க்கும் மேல் கலந்துகொண்ட மாபெரும் தீபாவளி கொண்டாட்டத்தில் மேயர் கென் லிவிங்ஸ்டன், தீபாவளி லண்டனிலுள்ள் அனைவருக்குமான பொது கொண்டாட்டம் என்று அறிவித்துள்ளார்
அமெரிக்கா
இந்தியர்களின் பாரம்பரியத்தை தாங்களும் பின்பற்ற வேண்டும் என்ற விழைவு கொண்டவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் எனலாம்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுடன் இணைந்து பலரும் தீபாவளி, அதன் சாரம் மாறாமல் கொண்டாடி வருகின்றனர். மேற்குறிப்பிட்ட நாடுகள் மற்றுமின்றி உலகில் பல்வேறு பகுதிகளும் தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் முறைகளில் வேண்டுமானால் சில மாற்றங்கள் இருக்கலாம்; கணிப்பொறியில் மட்டுமே வான வேடிக்கையை கண்டு ரசித்து மகிழலாம்!
ஆனால், உலக அளவில் சகோதரத்துவத்தை வளர்க்கும் பண்டிகைகளில் குறிப்பிடத்தக்கதான தீபாவளி, நவீன நரகாசுரன்களாகத் திகழும் பயங்கரவாதம், வன்முறை, வறுமை போன்ற தீயனவற்றையும் ஒழிக்க நமக்குத் தூண்டுகோலாய் அமைகிறது!