Thursday, September 6, 2007

வழக்கம் போல....

எப்போதும் போலவே
இன்றைய எனது காலையும்
அவசரமாய்த்தான் விடிந்தது.

இப்போதெல்லாம்
இனிய கனவுகள் என்பது
எல்லோருக்கும் போல்
எனக்கும்
இரவுகளில் வருவதில்லை

வானிலே பறக்கும் விமானங்கள்
நேரிலே மோதுவதாய்
ஏதேதோ கனவுகள்
தீப் பிழம்புக் குவியலுக்குள்
நான் நின்று தவிப்பதாய்
திடுக்கிட்ட விழிப்புகள்

ஆனாலும்
விடியல்கள் வழமை போலத்தான்...

இன்று என்ன சமையல்
என்பதில் தொடங்கி
கூட்டல் கழுவல்
துடைத்தல் பெருக்கல்
எல்லாம் முடித்து....
வேலைக்கு ஓட வேண்டுமென்பதில்
மனசு பரபரத்தது.

இத்தனைக்கும் நடுவே...
"அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற நினைப்பை
கொழுத்தி எறிந்தவள் மாலதி... "
பெண் பெருமை பாடியது வானொலி.

எனக்குள்
மின்னலாய் கோடிட்டது மகிழ்ச்சி
நானே
களத்தில் நிற்பது போன்ற திருப்தியுடன்
மாலதியின் நினைப்பை மனதில் இருத்தி
பத்திரிகையில் வந்த கவிதை படித்து
ஒரு மிடுக்கோடு நிமிர...

"என்னப்பா இண்டைக்குச் சாப்பாடு...?
பேப்பரும் கையுமா
நீ இருந்தால்...!
எனக்குப் பசிக்குது..."
கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்

அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல....

2 comments:

  1. summa. varthaila tamil patrum,kavithai orvamum waste deva... nee neeya irruka palakiko.... dont put a fake wrapper around u... to show u r good enough. stop always talking abt u... have some time to listen to others !!!!!

    sounds good rite....

    ReplyDelete
  2. அக்கா நீங்க சொல்றது எல்லாம் correct தான்... என்ன பண்ண எல்லாத்துக்கும் எல்லாமும் கிடைப்பது இல்லையே... ஆசை பட்டது கிடைக்கவில்லை என்றால் கஷ்டம் தான்.. உங்க கஷ்டம் எனக்கு மட்டும் தான் புரியும்...

    ReplyDelete