Showing posts with label தமிழர்களுக்காக கவலைப்படவில்லை. Show all posts
Showing posts with label தமிழர்களுக்காக கவலைப்படவில்லை. Show all posts

Friday, November 18, 2011

வாக்களித்த பலனை மக்கள் அனுபவிப்பார்கள்

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களுக்கு நல்ல மாற்றம் கிடைத்துள்ளது...ஐந்தாண்டுகளாக பால் விலை மற்றும் பேரூந்து கட்டணங்களை உயர்த்தாமல் ஆட்சி செய்த கலைஞரின் நிர்வாகம் எங்கே? ஆறு மாதத்துக்குள் ..இப்படி உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மக்களின் கழுத்தை அறுக்கும் இந்த விலை உயர்வினை அறிவித்துள்ள ஜெயாவின் நிர்வாக திறமை எங்கே?ஏன் பீர்..விஸ்கி போன்ற ..மது வகைகளின் விலையை உயர்த்துவதில் என்ன கஷ்டம்?சிகரட்..பீடி..வகைகளின் விலையை உயர்த்தி இருக்கலாமே? அதை விட்டு மக்களின் அன்றாட இன்றி அமையாத பொருளான பாலின் விலையையும்...பேரூந்து கட்டணத்தையும் உயர்த்துவது என்ன நியாயம்?

 

வாக்களித்தததன் பலனை மக்கள் அனுபவிப்பார்கள் என குஷ்பு கூறியது உண்மையாகி உள்ளது...வீணாக கடந்த ஆட்சியின் மீதும்..மத்திய அரசின் மீதும் பழியை போடுகிறார்...கேட்ட நிதி கிடைத்ததாக நீங்கள்தானே டில்லியில் கூறினீர்கள்...இப்போ ஏன் இந்த வழக்கமான பல்டி?கடந்த ஆட்சியின் நிர்வாக ஊழல்கள் களையப்பட்டதாக கூறினீர்களே ...அந்த களைஎடுப்பின் மூலம் கிடைத்த நிதி எங்கே? நிழலின் அருமை வெயிலில் போனால் தெரியும்...கலைஞரின் அருமை இப்போது பலருக்கு புரிந்திருக்கும்....தனியார் பேரூந்து உரிமையாளர்களை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு....தனியார் பால் உற்பத்தியினரை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு...என்ன செய்தால் என்ன...மீண்டும் சங்கரன்கோவில் இடை தேர்தலிலும் மக்கள் உங்களுக்குத்தான் வாக்களித்து நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்..அதன்மூலம் இந்த விலை உயர்வை மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்று சொல்ல போகிறீர்கள்...எனவே மேலும் பல விலை உயர்வுகளை அறிவிக்க வேண்டுகிறேன்....தமிழ் மக்கள்..ரொம்ப நல்லவுங்க,,எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க…

 

உள்ளாட்சித் தேர்தல் வரை கமுக்கமாக இருந்துவிட்டு ஜெ. தனது வேலையைக் காட்டி விட்டார். எல்லோரும் ஜெ.வை துணிச்சலான பெண்மணி என்பர். உண்மையிலேயே நெஞ்சுரம் இருந்திருந்தால், இந்த விலை ஏற்றத்தை முன்பே செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். இந்த நிர்வாகச் சீர்கேடுகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே காரணம். இலவச மின்சாரம், இலவச தொலைக்காட்சி, இலவச ஈருருளை வண்டி, இலவச பேருந்து பயணம், இலவச மடிக்கணினி, இலவச மின் ஆட்டுக்கல் மற்றும் அரைப்பான், இன்னபிற.... இன்னபிற... அப்பப்பா எத்தனை இலவசங்கள். இதுவும் ஒரு கையூட்டே! அப்புறம் ஏன் கருவூலம் காலியாகாது? அதை எல்லாம் நம் தலையில்தானே ஏற்ற வேண்டும்! கையாலாகாத அரசியல் வியாதிகள்!! இந்த விலைவாசி ஏற்றத்துக்கு எல்லோரும் கருத்து சொல்லும்போது, அம்மா கூட்டணியில் இருந்து வாக்குக் கேட்ட 'தொழிலாள தோழர்கள்' கருத்துச் சொல்லாமல் உண்டியல் குலுக்கப் போய்விட்டார்களா? இல்லை, எதிரில் உட்கார வேண்டிய 'படைத்தளபதி' இன்னும் 'தெளிவு' பெறவில்லையா?

 

மானங்கெட்ட இந்த மனிதர்களுக்கு வாக்களித்த நாம் எப்போதுதான் கொள்ளிக்கட்டையால் தலையச் சொறிந்திருக்கின்றோம் என்பதை உணர போகின்றோம்?

Saturday, April 23, 2011

கண்ணகி கோயில்

வருடத்திற்கு ஒருநாள் மட்டும், அதுவும், குறிப் பிட்ட நேரம் மட்டுமே திறந்திருக்கும் மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா, சென்ற, ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. மாநாய்க்கன் மகளாய் பிறந்து, மாசாத்துவன் மகனான கோவலனை திருமணம் செய்து கொண்ட கண்ணகி, கணவருக்காக சகலத்தையும் இழந்த போதெல்லாம் பொறுமை காத்தவர். ஆனால், கணவரை இழந்ததும், பொங்கி எழுந்து, அதற்கு காரணமான பாண்டிய நாட்டு மன்னர் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டவர். தன் கற்பின் சக்தியால், மதுரை நகரையே எரித்தவர். இன்றளவும் களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும், கற்பின் தெய்வமாகவும், கற்புக்கரசியாகவும் போற்றப்படுபவர். அவர் நினைவாக, சேர மன்னன் கட்டியதுதான் இந்த மங்கலதேவி கண்ணகி கோவில். தமிழக - கேரள எல்லையில், குமுளி மலையின் உச்சியில்தான் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து பார்த்தால், சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க, ரம்மியமான சூழ்நிலையில், தேக்கடி அணையும், தமிழக கிராமங்களும் அழகாக தென்படும்.

சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு, இவ்வளவு உச்சியில் கட்டப்பட்ட இந்த கோவில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. முற்காலத்தில், காட்டு வழியாக நடந்துதான், கோவிலை அடைய முடியும். கடந்த, 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயை அடிப்படையாக வைத்து, பின்னாளில், மொழிவாரியாக எல்லை பிரித்த போது கூட, இந்த கண்ணகி கோவில் தமிழகத்தில்தான் இருக்கிறது என்று கேரளா ஒத்துக் கொண்டது. இந்த கோவிலுக்குச் செல்ல, கேரளாவின் குமுளியில் இருந்து, ஜீப்பில், 16 கி.மீ., தூரம் சென்றால்தான், கண்ணகி கோவிலை அடைய முடியும். ஜீப் செல்வதற்காக, எப்போது கேரள அரசு ரோடு போட்டதோ, அப்போது முதல் கண்ணகி கோவில் கேரளாவிற்கு சொந்தம் என்று கூற ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக, வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்ரா பவுர்ணமியையொட்டி, ஒரு வார காலம் எடுக்கப்பட்ட விழா, கெடுபிடி காரணமாக, மூன்று நாட்களாகி, பின், ஒரே நாளாகி, அதுவும் இந்த வருடம் காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மட்டுமே என்று நிர்ணயித்து விட்டனர்.

இந்த ஒருநாள், கண்ணகியின் உருவம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும், தங்குவதற்கும் என்று, பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது; காரணம், கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு.
பழமையான, பாரம்பரியமான, பல்வேறு தமிழ் கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர்களின் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டும். கோவில் மீண்டும் தமிழர்களுக்கே என்று மீட்டு எடுக்க வேண்டும்.

எப்படி செல்வது?

image

இந்த வருடம் என்னுடைய நண்பர்கள் சிலர் அங்கு சென்று வந்தனர்.  முதலில் கம்பம் சென்று, பின்பு கூடலூர், அங்கிருந்து பளியன்குடிக்கு ஆட்டோவிலும் காலை ஐந்தரை மணிக்கு சென்றனர். ஏறுவதற்கு கடினமான மலைமீது ஏற ஆரம்பித்து, சரியாக எட்டரை மணிக்கு கோவிலை அடைந்து, சேரன் செங்குட்டுவனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப் பட்ட கோயிலின் ஒவ்வொரு கல்லையும் தொட்டுணர்ந்து சிலிர்த்துப் போனார்களாம். கம்பத்திலிருக்கும் கண்ணகி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தார்கள். அங்கு வரும் தமிழர்கள் கண்ணகி தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்றும், உரிமை என்றும் பேசுவதை கேட்க முடிந்ததாம். முழுவதும் கேரளா காவல்துறையினரால் நிரம்பியிருந்த அப்பகுதியில் சொற்ப அளவில் இருந்த தமிழக காவல் துறையினரை பார்க்க முடிந்தது. அவர்களும் மக்களை ஒழுங்கு படுத்துவதை விட்டு, கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தனராம். நெகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் வயதானவர்கள் கடினமான மலையை கோலூன்றி ஏறி வந்து கண்ணகியை வழிபடுவதுதான். தமிழக அரசோ, தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்களோ இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை என்பது புரிந்த பொது இதயம் வலித்தது.

இதை பற்றி எல்லாம் நம்ம அரசியல் வாதிகளுக்கு எங்க நேரமிருக்கு..? சினிமாவுக்கு கதை வசனம் எழுதவும், பாராட்டு விழாவில் பங்கு பெறுவுமே நேரம் பத்தாது. கண்ணகி கோயில் பற்றிய சர்ச்சை கடந்த ஐம்பது வருடங்களாக உள்ளது. இதுவரையில் யாரும் இதுபற்றி எந்த கோர்ட்டிலும் வழக்கு வில்லை. தமிழனுக்கு இது பற்றி அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை தான் இது பற்றி பேசுகிறார்கள். ஏன் தமிழ்நாடு அரசோ மக்களோ கேஸ் தொடுக்கவில்லை. இது அரசியல் மட்டும். மக்களுக்கு அவசியம் இல்லை என்பதாலே. ...

சரியாகத்தான் சொன்னார்களோ, தமிழ் இனி மெல்லச்சாகும்...

Thursday, October 21, 2010

தினமலர் : மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி'

"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'

"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

இதை எல்லாம் விட 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயமே அழிஞ்சு போச்சு. விவசாயி எல்லாம் நெலத்தையும் வித்துட்டு கூலிகாரனா மாறிட்டு வர்றான். விவசாயிய சொல்லி குத்தம் இல்ல. கூலிகாரன் கிடைக்க மாட்டேங்க்குறான். என்ன என்றால் விவசாய கூலி 50 ருபா 8 மணி நேரம் கடுமையா வேலை பார்க்கணும். ஆனா இங்க 100 ருபா வேலை 1/2 மணி நேரம் கூட கடுமையான வேலை கிடையாதே 2 மணி நேரம் டைம் பாஸ் தானே.. விவசாயே உழைக்க மறக்காதே பின்னால் ரெம்ப கஷ்டம் . பின் விளைவுகளை யோசித்து செயல் படுவோம்.

இது நூறு சதவிகிதம் உண்மை. நம் தமிழ் நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு தான், கேடு கெட்ட அரசியல்வாதிகள் மக்களை சொம்பேரியாக்கியது மட்டுமில்லாமல் முட்டாளும் ஆக்கிறார்கள்.

இலவசம் என்றுகொடுப்பதை தங்கள் சொந்தப்பணத்தில் இருந்தோ,கட்சிப்பணத்தில் இருந்தோ கொடுக்கட்டும் இந்த கர்ண மகா பரம்பரைகள். இதை யாரும் தடுக்கபோவதில்லை மக்களின்வரிப்பணத்தை வாரி வழங்க,வீணடிக்க இவர்கள் யார்? மருத்துவம்,கல்வியை அனைவருக்கும் இலவசமாக தரலாம் அதில் தவறு ஒன்றும்இல்லை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் அவர்களே தங்களுக்கு தேவையானவற்றை,தேவையான நேரத்தில்வாங்கி கொள்ள முடியும் தரமான குடிநீர்,தரமான சாலைகள் சுத்தம் சுகாதாரமான சுற்றுப்புர சுழல், கழிப்பிடவசதிகள் கட்டாயம் அனைவருக்கும் அவசியம். விலைவாசியை குறைக்க சொன்னால் ஏற்றுகின்றனர் வியாதிகள் இல்லா சூழல்,கொசுக்கள் மூலம் பரவும் பலவகை வியாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்.வியாதிகள் இங்கு இலவசம். குரங்கு கையில் பூமாலை சிக்கியதை போல் நமதுஅரசியல் வாதிகளிடம் சிக்கிய ஜனநாயகம் சின்னாபின்னமாகி சீரழிந்துவருவதுவேதனையை அளிக்கிறது. மக்களுக்காகபயன்படவேண்டிய ஜனநாயகம் நமது சுயநலஅரசியல்வாதிகளுக்கு நன்றாக பயன்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இலவசமா கிடைக்கிற பொருளைவிட இலவசம் குடுக்கிற ஆளோட நோக்கத்தை முதல்ல பார்க்கணும் அப்பு..காமராஜர் மதிய உணவு போட்டார்னா அதுக்கு காரணம் புள்ளைக குறைந்தபட்சம் பள்ளிக்கூடத்துக்கு வரட்டுமேன்னுதான்..அது ஒரு உதவி.. அதை வச்சு ஓட்டு வாங்குறதெல்லாம் அந்த சுயநலமில்லாத மனுசனோட நோக்கமா இருந்ததில்லை..ஆனா இப்போ இலவசம் குடுக்கிற ஆளையும் பாருங்க..சுயநலத்தோட மொத்த உருவம்..இவரு குடுக்கிற இலவசம் ஓட்டுக்கு குடுக்கிற கையூட்டு.. ஆதாயமில்லாம யாராவது கையூட்டு குடுப்பாங்களா? கொஞ்சத்தை குடுத்துட்டு மொத்தத்தையும் ஆட்டைய போடுறதுதான் இவுங்களோட நோக்கம்..பத்து ரூபாய் கீழே கிடைக்குதுன்னு அதை எடுக்க குனிஞ்சா பின்னாடி ஆயிரம் ரூபாய் வச்சிருந்த பர்ஸ் காணாம போயிருக்கும்..அந்த பத்து ரூபாய்க்கும் இப்போ கிடைக்கிற இலவசத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.....

இலவசம் , இலவசம் எங்கு பார்த்தாலும் ஒரே நீண்ட வரிசை காரணம் அரசு, ஒரு இலவச திட்டத்திற்கு ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யும் அரசு ஏன் 25 கிமீ தொலைவிற்கு ஒரு தொழில்சாலை கட்டி வீட்டிற்கு ஒருவருக்கு வேலை ஏன் கொடுக்ககூடாது அப்படி கொடுத்தால் அனைவரையும் இலவசம் என்ற தீராத வியாதி இருந்து மீட்கலாம்

இது ஒரு தனி மனிதனின் ஆதங்கம் அல்ல. ஒட்டுமொத்த தமிழனின் குரலும்கூட....

Saturday, May 30, 2009

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் 'நாடக நடுநிலைமை': 'குமுதம்' சாடல்

 

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்தியாவில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் 'நாடக நடுநிலைமை'யை கடைப்பிடித்து வருவதாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழ் சாடியுள்ளது.

இது தொடர்பாக 'குமுதம்' வார இதழில் வெளிவந்த அரசு கேள்வி - பதில் வருமாறு:

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?

ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.

சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.

இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது.

அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்... இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.

ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை

"ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை" என தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமணி' நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பஞ்சாப் பற்றி எரிகிறதே, அங்கே மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குகிறதா? சமீபத்தில் பஞ்சாபில் நடக்கும் கலவரங்களைக் கேள்விப்பட்ட பலருடைய எண்ண ஓட்டமும் இதுவாகத்தான் இருக்கிறது.

பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டிய கதையாக, எங்கோ ஐரோப்பாவில் உள்ள வியன்னாவில் நடந்த சம்பவம், இங்கே பஞ்சாபில் வன்முறையைக் கிளப்பியிருக்கிறதே, அது ஏன்? இந்தப் பிரச்னையின் பின்னணி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ஜாதியத்தில் கட்டுண்டு கிடக்கும் இந்து சமுதாயத்தின்மீது ஏற்பட்ட அதிருப்தியால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களில் ஒன்றுதான் சீக்கிய மதம்.

மனிதனை மனிதன் ஏற்றத்தாழ்வு கூறி பாகுபடுத்துவதை எதிர்த்து அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் முன் சரிசமம் என்பதையும், எங்கும் நிறைந்த அந்தப் பரம்பொருளுக்கு உருவமில்லை என்பதையும் நிலைநாட்டும் விதத்தில் குருநானக்கால் உருவாக்கப்பட்ட சீக்கிய மதத்தின் அடிப்படை, ஆதாரம் எல்லாமே குருகிரந்த சாஹிப் என்கிற அவர்களது வேதம் மட்டுமே.

ஜாதியத்தின் தடைகளை உடைத்தெறிய மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் எப்படி வேறு சில மதங்களில் பழைய ஜாதிய கண்ணோட்டத்துடன் நடத்தப்படுகிறார்களோ அதே அனுபவம்தான் சீக்கிய மதத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சந்த் ரவிதாஸ் என்பவர் 700 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரலை உயர்த்தியவர். இவரது பல உபதேசங்கள் குருகிரந்த சாஹிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

உயர் ஜாதி சீக்கியர்கள் சந்த் ரவிதாஸ் குருநானக்கின் சீடராகக் கருதுகிறார்கள். ஆனால் ரவிதாஸின் சீடர்களோ அவரையே குருவாகக் கருதுகிறார்கள்.

1920-ல் மங்குராம் என்கிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஜாதி சீக்கியருக்கு எதிராக ரவிதாஸரை முன்னிறுத்தி ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நில உடைமையாளர்களாவது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது.

மங்குராமைத் தொடர்ந்து பல தாழ்த்தப்பட்ட சமுதாய இயக்கங்கள் தோன்றிவிட்டன. சச்கண்ட் என்று அழைக்கப்படும் இந்த இயக்கங்கள் தாழ்த்தப்பட்டவர்களை இணைப்பது மட்டுமல்லாமல், சீக்கிய மதத்திலேயே ஒரு தனி அமைப்பாகவும் கலந்துவிட்டிருக்கின்றன. சீக்கிய மதத்திலும் தேராசச்சாசௌதா, தேராசச்கண்ட் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.

ஜாதி சீக்கியர்களின் சபையாக இருப்பது எஸ்.ஜி.பி.சி. எனப்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி. இதுதான் எல்லா சீக்கிய குருத்வாராக்களையும் இணைத்து மேலாண்மை செலுத்தும் அமைப்பு.

அமிருதசரஸ் பொற்கோவிலில் தான் இதன் தலைமையகம். ஏறத்தாழ, வாட்டிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபையைப் போன்றது இது எனலாம். இதில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் ஆங்காங்கே செயல்படுகின்றன.

அநேகமாக பஞ்சாபிலுள்ள எல்லா ஊர்களிலும் எஸ்.ஜி.பி.சி.யின் குருத்வாராவும் தாழ்த்தப்பட்டவர்களின் குருத்வாராவும் காணப்படுகின்றன.

இப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் ஜாதி சீக்கியர்களைப்போலவே வசதி பெற்றவர்களாகிவிட்டனர். உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றனர். இவர்களது வளர்ச்சி தங்களுக்குச் சவாலாக அமையும் என்று கருதுகிறது எஸ்.ஜி.பி.சி. காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் துணையுடன் இந்தத் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் மீது ஜாதி சீக்கியர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதுதான் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஞானி ஜெயில்சிங் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கிற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர் எவரும் அரசியல் முக்கியத்துவம் பெறவில்லை.

சமீபகாலமாக காங்கிரஸ் தனது அரசியல் எதிரியான அகாலிதளத்தை வீழ்த்த இந்த தேரா அமைப்புகளைத் தூண்டி விடுகிறது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. ஆளும் அகாலிதளத்தின் ஆதரவுடன் எஸ்.ஜி.பி.சி. இந்தத் தேரா அமைப்புகளை ஒடுக்க நினைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இத்தனை நாளும் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த ஜாதிப் பிரச்னை இப்போது எரிமலையாக வெடித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவு எளிதாக இந்த எரிமலை அடங்கிவிடாது. அரசியல் கட்சிகள் அடங்க அனுமதிக்கவும் மாட்டார்கள்.

எங்கோ வியன்னாவில் தேராசச்கண்ட் தலைவர் நிரஞ்ஜன்தாஸ் கொலை செய்ய காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கத்தினர் முயன்றனர் என்பதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது. பிரதமர் பதறுகிறார். உள்துறை அமைச்சர் பதற்றமடைகிறார். ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் 50 கிலோ மீற்றர் தூரத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் வீடின்றி வாசலின்றி, உடையின்றி உண்ண உணவின்றி அனாதைகளாய், சொந்த மண்ணில் அகதிகளாய் அல்லல்படுகிறார்கள். கேட்க நாதியில்லை. நமக்கும் கவலையில்லை; இது காலத்தின் கேவலமான கோலமல்லவா?" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.