Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Friday, November 18, 2011

வாக்களித்த பலனை மக்கள் அனுபவிப்பார்கள்

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களுக்கு நல்ல மாற்றம் கிடைத்துள்ளது...ஐந்தாண்டுகளாக பால் விலை மற்றும் பேரூந்து கட்டணங்களை உயர்த்தாமல் ஆட்சி செய்த கலைஞரின் நிர்வாகம் எங்கே? ஆறு மாதத்துக்குள் ..இப்படி உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மக்களின் கழுத்தை அறுக்கும் இந்த விலை உயர்வினை அறிவித்துள்ள ஜெயாவின் நிர்வாக திறமை எங்கே?ஏன் பீர்..விஸ்கி போன்ற ..மது வகைகளின் விலையை உயர்த்துவதில் என்ன கஷ்டம்?சிகரட்..பீடி..வகைகளின் விலையை உயர்த்தி இருக்கலாமே? அதை விட்டு மக்களின் அன்றாட இன்றி அமையாத பொருளான பாலின் விலையையும்...பேரூந்து கட்டணத்தையும் உயர்த்துவது என்ன நியாயம்?

 

வாக்களித்தததன் பலனை மக்கள் அனுபவிப்பார்கள் என குஷ்பு கூறியது உண்மையாகி உள்ளது...வீணாக கடந்த ஆட்சியின் மீதும்..மத்திய அரசின் மீதும் பழியை போடுகிறார்...கேட்ட நிதி கிடைத்ததாக நீங்கள்தானே டில்லியில் கூறினீர்கள்...இப்போ ஏன் இந்த வழக்கமான பல்டி?கடந்த ஆட்சியின் நிர்வாக ஊழல்கள் களையப்பட்டதாக கூறினீர்களே ...அந்த களைஎடுப்பின் மூலம் கிடைத்த நிதி எங்கே? நிழலின் அருமை வெயிலில் போனால் தெரியும்...கலைஞரின் அருமை இப்போது பலருக்கு புரிந்திருக்கும்....தனியார் பேரூந்து உரிமையாளர்களை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு....தனியார் பால் உற்பத்தியினரை திருப்தி படுத்த இப்படி ஒரு விலை உயர்வு...என்ன செய்தால் என்ன...மீண்டும் சங்கரன்கோவில் இடை தேர்தலிலும் மக்கள் உங்களுக்குத்தான் வாக்களித்து நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள்..அதன்மூலம் இந்த விலை உயர்வை மக்கள் ஏற்றுகொண்டார்கள் என்று சொல்ல போகிறீர்கள்...எனவே மேலும் பல விலை உயர்வுகளை அறிவிக்க வேண்டுகிறேன்....தமிழ் மக்கள்..ரொம்ப நல்லவுங்க,,எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க…

 

உள்ளாட்சித் தேர்தல் வரை கமுக்கமாக இருந்துவிட்டு ஜெ. தனது வேலையைக் காட்டி விட்டார். எல்லோரும் ஜெ.வை துணிச்சலான பெண்மணி என்பர். உண்மையிலேயே நெஞ்சுரம் இருந்திருந்தால், இந்த விலை ஏற்றத்தை முன்பே செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். இந்த நிர்வாகச் சீர்கேடுகளுக்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே காரணம். இலவச மின்சாரம், இலவச தொலைக்காட்சி, இலவச ஈருருளை வண்டி, இலவச பேருந்து பயணம், இலவச மடிக்கணினி, இலவச மின் ஆட்டுக்கல் மற்றும் அரைப்பான், இன்னபிற.... இன்னபிற... அப்பப்பா எத்தனை இலவசங்கள். இதுவும் ஒரு கையூட்டே! அப்புறம் ஏன் கருவூலம் காலியாகாது? அதை எல்லாம் நம் தலையில்தானே ஏற்ற வேண்டும்! கையாலாகாத அரசியல் வியாதிகள்!! இந்த விலைவாசி ஏற்றத்துக்கு எல்லோரும் கருத்து சொல்லும்போது, அம்மா கூட்டணியில் இருந்து வாக்குக் கேட்ட 'தொழிலாள தோழர்கள்' கருத்துச் சொல்லாமல் உண்டியல் குலுக்கப் போய்விட்டார்களா? இல்லை, எதிரில் உட்கார வேண்டிய 'படைத்தளபதி' இன்னும் 'தெளிவு' பெறவில்லையா?

 

மானங்கெட்ட இந்த மனிதர்களுக்கு வாக்களித்த நாம் எப்போதுதான் கொள்ளிக்கட்டையால் தலையச் சொறிந்திருக்கின்றோம் என்பதை உணர போகின்றோம்?

Thursday, November 3, 2011

சர்ச்பார்க் ஸ்டூடன்டின் சிறுபிள்ளைத்தனம்

என்னதான் இணையதளத்தில் படித்தாலும், புத்தகங்களைப் படிப்பதில் உள்ள ஆத்மா திருப்தியே தனி. அந்த நிறைவை புத்தக வாசிப்பை பழக்கமாக, விருப்பமாக கொண்டவர்களாலேயே உணர முடியும். எது எப்படி இருந்தாலும், நூலகத்தை மூடுவது என்பது, தான் பெற்ற குழந்தையை தனது கைகளாலேயே கொலை செய்வது போன்றது. இரண்டு செயல்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஜெ. செய்வது இமாலயத்தவறு மட்டுமல்ல, வரலாற்றுப்பிழையும் கூட

 

தாலி அறுத்தவள் வீட்டில் தலா தலா பெருதனம் என்பார்கள். அதே போல் தமிழ்நாட்டின் நிலை உள்ளது. தமிழகத்தை பிடித்த பீடைகளான திமுக, அதிமுக இடையில் சிக்கி தமிழகம் சீரழிகிறது. நூற்று எழுபத்திரண்டு கோடி செலவில் நூலகம் அமைக்கவில்லை என்று யார் அழுதார்கள்? நூலகமே காணாத கிராமப்புறங்களும், சரிவர பராமரிக்கப்படாத நகர்ப்புற நூலகங்களும் இருக்கும் போது, அண்ணா நூற்றாண்டு நூலகம் தேவை தானா? மேலும், அண்ணா திமுக என்ற கம்பெனியின் ஸ்தாபகர். அவரின் நூற்றாண்டு விழாவை கம்பெனி செலவில் கொண்டாடியிருக்க வேண்டும். அதற்கு அரசுப்பணத்தை வீணடித்ததே தவறு. ஒழியட்டும். இப்போது கொட நாட்டு அரசி வந்ததும் அதை மாற்றியிருப்பது முழுக்க, முழுக்க காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்ன? ஏற்கனவே, புதிய தலைமை செயலகத்தை தன் விருப்பம் போல் பயன்படுத்த உத்தரவிட்டுள்ள ஜெயா இன்னும் இது போல் என்னென்ன தண்ட செலவுகளை செய்ய போகிறாரோ? தட்டி கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்ட பிரசண்டன் என்ற கதையாக, அராஜக திமுகவின் அருமை தலைவியை கேள்வி கேட்க இங்கு நாதி இல்லை. கேட்கவேண்டிய எதிர்கட்சி தலைவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை.

 

கட்சியை உடைக்க போகிறார்கள் என்றதுமே அவர் பல்டி அடித்து ஜெயா காலில் சரணாகதி அடைந்து விட்ட விஜயராஜிடம் வீரத்தை எதிர்பார்க்க முடியாது. பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதை ஜெயா ஆட்சி செய்தால் விபரீதங்கள் அரங்கேறும் என்று மாற்ற வேண்டியது தான். அடுத்த நான்கரை ஆண்டுகள் தமிழகத்துக்கு ஏழரை. மொத்தத்தில் ஜெயாவின் இந்த முடிவு ஆணவத்தின் வெளிப்பாடேயன்றி,ஆதரிக்கத்தக்கதல்ல.

 

நூலகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.  பெரும்பாலான இளைஞர்கள் தேர்வில் "பாஸ்" ஆக வேண்டும் என்ற நோக்கோடுதான் கல்விச்சாலைகளுக்கு செல்கின்றனர். குறிப்புக்களையும் தகவல்களையும் தேடுபவர்கள் சுலபமாக இணைய தளம் மூலமாக தேடிக்கொள்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் நூலகங்கள் சரிவர பராமரிக்கப்பட்டாலே போதும் என்பதுதான் உண்மை நிலை. எப்படியோ, தேவையோ தேவை இல்லையோ, விளம்பரத்திற்காக ஒரு பெரிய நூலகத்தை கட்டியாகி விட்டது. இதனால் பயன் அடைந்தவர்கள் மார்ட்டின் போன்றவர்கள் என்பதும் உண்மைதான். இந்த நிலையில் குழந்தைகள் மருத்துவ மனை உருவாக்க வேண்டுமென்றால் புதிதாக கட்டுவதுதான் சிறந்ததாக இருக்குமே அன்றி இருக்கும் நூலக கட்டிடத்தை மாற்றுவது மற்றவர்கள் குறை காண வழி வகுக்கும்.

 

பணம் வீணாவது ஒரு புறம் இருக்கட்டும்! இன்றைய டிவி, செல்போன் கலாச்சாரத்தில், வாசிக்கும் பழக்கமே இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறதே! கன்னிமாரா போன்ற பெரும் நூலகங்களில் கூட முன்பு இருந்ததுபோல் சீரியசாகப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது!பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகம், நூலகரே இல்லாதபோது , சென்னையில் இன்னொரு நூலகம் எதற்கு? வாசிப்புப்பழக்கத்திற்கு நினைவுச்சின்னமாகவா? வாசிக்கும் பழக்கத்தை பெரும் நூலகங்களால் தூண்ட முடியாது! சிற்றூர் வரை நூலக இயக்கம் போதுமான நிதி ஆதாரத்துடன் துவக்கப் பட்டாலே வளரும்! மற்றபடி அண்ணா, அம்பி நூலகமெல்லாம் வெறும் விளம்பரக் கட்டிடமே! ஊழல் கட்டிடங்களில் சரஸ்வதி குடியிருக்க மாட்டாள்!( சொந்த புத்தகங்களால் தன் வீட்டிலேயே நூலகம் அமைத்து வாசிக்கும் பழக்கமுள்ள ஜெயலலிதா சிந்திப்பாரா? )

 

இந்தியாவிலேயே அதி நவீன வசதிகள் கொண்ட முதல் நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்தான். எட்டு தளங்களைக் கொண்ட இந்நூலகத்தில் ஒவ்வொரு தளமும் ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பி’ பிரிவு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளுகுளு வசதியோடு கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தின் அனைத்து தளங்களிலும் சுற்றுச் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத சி.எஃப்.எல். விளக்குகள் பொறுத்தப்பட்டுளளன. இளநீலநிற, கண்ணாடி சுவர் வழியே சூரிய வெளிச்சம் முழுமையாக கட்டடத்திற்குள்ளே செல்லும் படியாக வடிவமைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பசுமை கட்டடமாக’ கட்டப்பட்டுள்ளது. இந்நூலகம் மாற்றப்படுவது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் விஜயகாந், மற்றும் சரத்குமார், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஈவிகேஎஸ் இளங்கோவன், சீமான் ஆகியோர்ன் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இவர்கள் (தெளிவாக & ஸ்டெடியாக)? விளக்க வேண்டும். இது இவர்களது மிக முக்கியமான கடமையாகும். செய்வார்களா? "காலின் அளவுக்கு ஏற்ப செருப்பு தைக்கும் அல்லது வாங்கும் நிலை போய், செருப்புக்கு ஏற்ப காலை வெட்டும் காலம் வந்ததே! துக்ளக் தர்பார்!!

 

அராஜகம் ஆ தி மு க ஆட்சி அமைந்ததுமே ஆரம்பம். சமச்சீர் கல்வி ஆரம்பிப்பதில் குளறுபடி, தலைமைச் செயலகம் மாற்றியமைப்பு, பரமக்குடியில் ஆறு பேரை சுட்டுக் கொன்றது, காவல் நிலையம் சென்றவர் விசாரணைக்குப் பின் பலி என்று தொடர்கிறது. இப்போது அண்ணா நூலகம் மருத்துவமனை ஆகிறது. இந்த ஆட்சியில் அனைவரும் மருத்துவமனையில் அல்லது மரணக்கிடங்கில் இருக்க வேண்டியது தானா? ஆட்சியில் அமர்த்திய அருமை மக்களே யோசியுங்கள்…

 

யார் இட்ட சாபமோ நம் மாநிலம் கடந்த 44 ஆண்டுகளாக இந்த இரண்டு தீய சக்திகளிடமும் மாட்டிக்கொண்டு சீரழிந்து வருகிறது!ஆட்சிக்கு வந்து மாதம் ஆறு ஆகியும் ஜெயா மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. இப்போ தேவையில்லாமல் ஒரு நூலகத்தை மூட திட்டமிடுகிறார். அடுத்து என்ன? தமிழகத்தில் கருனைகிழங்கு பயிரிடவோ விற்கவோ தடை செய்ய சட்டமா?? அஇஅதிமுக என்பது "அ[வர்] தி[றப்பதை] இ[வர்] மூ[டுவார்] அ[ம்புட்டுதான்] கழகம்" என்பதின் சுருக்கமா?

Sunday, August 14, 2011

தமிழ்நாடு நிலஅதிர்வும், புலம்பல்களும்…

தமிழகத்தில் ஆகஸ்ட் 12,2011 காலை திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடு, பள்ளிகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் பலர் அச்சத்துடன் வீதிக்கு வந்தனர். திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் , நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சரியாக 11.30 மணியளவில் மேற்கூறிய மாவட்டங்களில் மக்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. பெருத்த சேதம் ஏதும் இல்லையென்றாலும் சிறிய குலுக்கத்தில் மக்கள் நடுங்கிபோயினர்.

 

 

இது பற்றி சில புலம்பல்கள்…

 

அதிமுக: திருட்டு முன்னேட்ற்ற கழகம் அடித்த, செய்த பாவம் தமிழக மக்களை தாக்க ஆரம்பித்து விட்டது...

 

திமுக: கலைஞர் ஆட்சியில் மாதம் மும்மாரி பொழிந்தது. ஏழைகள் பசியாற உண்டார்கள். நாடு சுபிட்ஷமாக இருந்தது. ஆனால் இப்போது? விலைவாசி வானத்துடன் போட்டி போட்டுகொண்டு பறந்து கொண்டிருக்கிறது. பஸ் கட்டணம் கண்ணை கட்டுது. தாலிக்கு மட்டுமே வாங்கி கொண்டிருந்த தங்கம், இந்த புன்னியவதியில் ஆட்சியில் அருங்காட்சியஹங்களில் மட்டும் பார்க்க முடியும் போல் இருக்கிறது. கொலை, கொள்ளையை தடுக்க போலிசே இல்லை. ஆனால், பொய் கேஸ் போட்டு அநியாயம் செய்து, தன்மானம் இழந்து கிடக்கிறது. ஒரு ரூபாய் நல்ல அரிசியை பார்த்தவர்கள், புழு பூச்சி இருக்கும் அரிசியை வாங்கி, தின்று வாந்தி பேதி எடுத்து கிடக்கிறார்கள். பெங்களூர் கோர்ட்டு வா வா என்கிறது. தமிழ்நாடோ போ போ என்கிறது. ஆனால் ஆணவம் பிடித்து, சட்டசபை மாண்பை கெடுத்து, மக்கள் கடமையாற்ற கூடிய சபையை, ரெகார்ட் டான்ஸ் லெவெலுக்கு, நாலாந்தர (ஷகிலா) பட ரேஞ்சுக்கு கொண்டுவந்து, நாட்டை பற்றி கவலை இல்லாமல், மக்களை பற்றி கவலை இல்லாமல், அடிமைகள் கூட்டத்தை வைத்து, புகழ சொல்லி, தன்னிலை மறந்து கிடக்கிறார் கோமளவல்லி...

 

மக்கள்: வெள்ளைக்காரி சோனியாவினால் இந்தியா நாசமாகி கொண்டிருக்கிறது. கொள்ளைக்காரி ஜெயாவினால் தமிழ்நாடு தரைமட்டமாகி கொண்டிருக்கிறது. போதா குறைக்கு பூகம்பம், சுனாமி வேற இவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு பயமுறுத்தி கொண்டிருக்கிறது. ஏன் ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இயற்கைக்கு சீற்றம்? Ok, Jokes apart!!

 

 

இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது? காரணம், நாம் சிறுவயதில் படித்தோம்; மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று. அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2,300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும். மரங்களை வெட்டியதால் தான், ஐப்பசியில் பெய்ய வேண்டிய அடைமழை, கண்ட கண்ட பருவத்தில் பெய்கிறது. மரத்தைப் போல்

 

பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாததுதான். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில், 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்குக் கூட, ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தைப் போல், வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.  சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்... 50 ஆண்டுகளுக்கு முன், இப்படியா சென்னை இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.லண்டனில் தேம்சும், பாரிசில் செய்ன் நதியும், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் டன்யூபும், அந்த நாடுகளையே, சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. பாரிசில் எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கே அமைதியாக, செய்ன் நதி ஓடிக் கொண்டிருக்கும். படகுப் போக்குவரத்து உண்டு; குட்டிக் கப்பல்களும் ஓடும். ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது.

 

மெரீனா கடற்கரையை அழகு படுத்துகிறோம்' எனச் சொல்லி, அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கீரீட் போட்டு விட்டால், அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்தபட்சம், 50 ஆண்டுகள் தேவை; ஆனால், மரத்தை வெட்ட ஒரு மணி நேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால், திரும்பக் கொண்டு வர முடியுமா? மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவேதான், காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதேபோல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து, இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா? ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், "பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரத்தை விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல; உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.எந்த நகரமும், 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பதில்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் மட்டும் வெட்டி விடுகின்றனர்.

 

சுற்றியும் மலைகளால் சூழ்ந்த பகுதி சேலம் .. சேலத்திலேயே நிலநடுக்கமா... மலைகளால் சூழப்பட்ட பகுதிகளில் நிலநடுக்கம் வரும் வாய்ப்பு குறைவு என்கிறார்களே..அதை மீறியும் நிலா நடுக்கமா? இருக்கிற மலைய பூரா உடைச்சு granite ஸ்லாப் ஆக்கி வெளிநாட்டிற்கு விற்று கோடி கோடியா சம்பாதிக்கும் பண முதலைகளை ஒழித்து மலைகளை காப்பாற்றினால்தான் பூகம்பத்திலிருந்து தப்பிக்க முடியும் ,,,மக்கள் அனைவரும் புரிந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டால்தான் இது நடக்கும்,,அன்னை பூமியை காப்பாற்ற ஒன்று படுவோம் ,,,அமெரிக்காவில் பலபல மடங்கு மலைகள் இருந்தாலும் ஒரு மலை கூட உடை படவில்லை,,இயற்கையை காப்பாற்றி வருகிறார்கள்… பேராசை ஒழித்தால்தான் மரங்களை காப்பாற்றி மழை பெற முடியும்,,மக்களே சிந்தியுங்கள்.

 

இயற்கையிலிருந்து நாம் விலகி இருக்கிறோம் என்பதையே இயற்கை சீற்றங்களான நில அதிர்வு, சுனாமி, வெள்ளம், புயல் ஆகியவை தெரிவிக்கின்றன. ஆத்து மண்ண அள்ளாதீங்க நா யாரு கேக்குறா , இப்போ குய்யோ முய்யோ நு கத்தினா என்ன பண்ண. இது முடிவல்ல ஆரம்பம் ,,,நம் மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வரை…

Saturday, June 25, 2011

நேற்றைய அரசியல்வாதிகளும் & இன்று முளைத்த காளான்களும்...

கிறுக்கி கொஞ்சம் நாள் ஆச்சூ.... சரி ஆரம்பிபோம்...

முன்பு ஜீ.வா., காமராஜர், கக்கன் அவர்கள் எளிமையாக வாழ்ந்தனர். அவர்களுக்கு மொத்தம் இரண்டு சட்டையும், இரண்டு வேஷ்டி மட்டுமே இருந்ததாம். இவர்களுக்கு பின்னால் ஒரு அரசியல்வாதியைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். நேர்மையான அரசியல்வாதிகள் எல்லா கட்சியில் இருந்தாலும், சாதிக்காகவும்,மததிற்க்காகவும்,ஒட்டு சின்னதிற்க்காகவும் வாக்களிக்கும் மக்களே குற்றவாளிகள்.ஆனாலும் இந்த தேர்தலில் இவரை வெற்றி பெறச்செய்து அந்த களங்கத்தை துடைத்ததற்க்கு நன்றி.

மூத்த குடிமக்களிடம் பேசினேன், அவர்கள் சொன்னார்கள்  தி.மு.க. தலைவர்களும் துவக்க நிலையில் இப்படித்தான் இருந்தனர். இப்போது வந்த தலை முறைதான்(நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாக) எனக்குத்தெரிந்து எத்தனையோ தலைவர்கள், தமது சொந்த சொத்துக்களை விற்று கட்சி வளர்த்தனர்.மூன்றாம் வகுப்பில் இரயில் பயணம்.தொகுதிமுழுதும் காலையில் பவனி வந்து குறை கேட்ட காலம் ஒன்று. இன்றுதான், பத்து பதினைந்து அடியாட்களுடன் தொகுதியில் வலம் வருவது,கட்டை பஞ்சாயத்து, பணம் பிடுங்கிக் கழுகுகளாய் காட்சியளிக்கின்றனர். நல்ல,நேர்மையான அரசியல் வாதியை மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். அடுத்த ஐந்து ஆண்டு முழுதும் அமைதியாக அவருக்குத் தூக்கம் வரும்..ஏனெனில் வாய்தா வாங்கி, நீதி மன்றம் அலைய வேண்டிய வேலை இல்லையே...

சரி விஷயத்திற்கு வருவோம்...

சென்னை பழவந்தாங்கல் என்ஜிஒ காலனியில் உள்ள அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் யாரும் அது ஒரு எம்.எல்.ஏ.வின் வீடு என்றால் நம்பமாட்டார்கள். ஒரு மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடு அது.

அந்த வீட்டில்தான் மதுரவாயல் தொகுதியில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.பீம்ராவ் வசிக்கிறார்.

வீட்டிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தவிர ஆடம்பரப் பொருள்கள் எதுவும் இல்லை. விலை உயர்ந்த பொருள்களாக இரண்டைக் குறிப்பிடலாம்.

ஒன்று ஒரு பித்தளை தவலை. இரண்டாவது திமுக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இலவசக் கலர் டிவி. (அந்த டிவியும் பீம்ராவ் மனைவி பிடிவாதமாக வாங்கி வைத்ததாம்.)

இந்த எளிமையான வீட்டில் இருந்துதான் க.பீம்ராவ் கட்சி ரீதியாக சிறப்பாகப் பணியாற்றி வந்துள்ளதுடன், இப்போது தேர்தலிலும் சாதனை படைத்துள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதே தமிழகத்தில் பெரும் போராட்டம். பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து வார்டுகள் இதற்குச் சரியான உதாரணம்.

இந்நிலையில்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான க.பீம்ராவ் பொது தொகுதியான மதுரவாயலில் நின்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.செல்வத்தைவிட பீம்ராவ் கூடுதலாக 24,011 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் இரண்டு சந்தோஷங்கள் கிடைத்திருப்பதாக க.பீம்ராம் கூறுகிறார்.

ஒன்று: "இன்னும் கூடுதலாக மக்கள் பணியாற்ற ஒரு பதவி கிடைத்திருக்கிறது. ஆனால்

இதைப் பதவி என்று நாங்கள் சொல்ல மாட்டோம். பொறுப்பு என்றுதான் சொல்வோம். இதன் மூலம் மக்களோடு இன்னும் நெருங்கிப் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.'

இரண்டு: "புது பேன்ட் சட்டைகள் கிடைக்கின்றன. எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் அழுக்கு சட்டையோடு எங்கும் போகக்கூடாது என்று தோழர்கள் நினைக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு பத்து பேன்ட் சட்டைகள் எடுத்துக் கொடுத்தார்கள். இதைப்போல பல தோழர்கள் புது பேன்ட் சட்டைகள் எடுத்து வருகிறார்கள். இது ஒரு பெரிய சந்தோஷம்' என்கிறார்.

புது பேன்ட் சட்டை கொடுக்கும்போது க.பீம்ராவ் கண்டிப்பாகத் தையல் கூலியையும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

இந்த முறையைச் சிலர் தவறாக நினைக்கக்கூடும். ஆனால் கட்சி ரீதியான அவர் நடைமுறை வாழ்க்கையைப் புரிந்தவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.

1983-ம் ஆண்டு வாலிபர் சங்கம் மூலம் பீம்ராவ் அரசியல் பணிக்கு வந்து, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்திச் சிறை சென்றவர்.

இப்போது தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். முழு நேர கட்சி ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியால் அளிக்கப்படும் மாதாந்திரப் படியான 3 ஆயிரம் ரூபாயே அவரின் வருமானம்.

முழு நேர கட்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள் வேறு பணிகளிலும் இருக்கக்கூடாது. இந்தப் பணத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல். 2 மகன்கள்; ஒரு மகள் என இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றவர்கள் பள்ளி வகுப்புகளில் படித்து வருகிறார்கள். இவர்களின் கல்விச் செலவுகளை எல்லாம் உறவினர்களே கவனித்துக் கொள்கிறார்கள்.

எம்.எல்.ஏ.சம்பளம்: எம்.எல்.ஏ.க்களுக்குப் படிகளுடன் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தச் சம்பளத்தால் பீம்ராவ் குடும்பம் வசதி பெறும் என்று நினைத்தால் அதுவும் தவறானதாகும். இந்தச் சம்பளம் அனைத்தும் கட்சிக்குச் சென்று அவருக்குக் கிடைக்கப்போவது வெறும் 5 ஆயிரத்து 600 ரூபாயே.

"சம்பளம் முழுவதும் கட்சிக்கே போய்விடுவதால் வருத்தமா?' என்றால் "சம்பளம் என்பது பொருட்டல்ல. எனக்கு மக்களுக்குப் பணியாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதுதான் கவலையாக இருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்றுவதற்குப் போராடும் ஒரு மருத்துவரைப் போல நான் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்' என்று நினைக்கிறேன் என்றார்.

"பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் வெற்றிபெற்று இருப்பதன் மூலம் தமிழகத்தில் ஜாதி கண்ணோட்டம் குறைந்து போய்விட்டது என எடுத்துக் கொள்ளலாமா?' என்று கேட்டால், "தமிழகம் முழுவதும் குறைந்து போய்விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது. நான் வெற்றிபெற்றது நகர்ப்புறத்தைச் சார்ந்த பகுதி. இங்கு ஜாதி எண்ணம் குறைந்திருக்கலாம்.

ஆனால் ஜாதி உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. எந்தச் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறப்பான மக்கள் தொண்டு செய்பவர்களாக இருந்தால் அவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

ஜாதியற்ற சமுதாயத்தைக் காணவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதில் வெற்றிபெறலாம் என்கிற நம்பிக்கையை என் வெற்றி ஏற்படுத்தி இருக்கிறது' என்கிறார் க.பீம்ராவ் எம்.எல்.ஏ.

பொதிகை , விஜய் டிவி , ராஜ் டிவி போன்ற நடுநிலை தொலைக்காட்சி சேனல்கள் இவரைப்பற்றிய செய்தி, நேர்க்காணல் என்று பலவகையில் நேர்மைக்கு இடமுண்டு என்ற நமிபிக்கையூட்டும் பாடம் புகட்டும் நிகழ்சிகளை ஒளிபரப்ப வேண்டும். மக்கள் இவரைப்போல் உள்ளவர்களை தேடி தேர்ந்தெடுத்தல் மட்டும் போதாது. எளிமையை கற்கவும் வேண்டும். இவரைப்போல எல்லா M L A க்களும் இருந்தால் நம் நாடு முன்னேறும்.

இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள். இவரை போல் உள்ள சிலரால் தான் அரசியல் தூய்மை படுத்தப்பட வேண்டும். மக்களின் பணத்தை கொள்ளை அடிபவர்கள் இவரை பார்த்து திருந்த வேண்டும் இல்லாவிட்டால் இனிவரும் காலத்தில் அவர்கள் கம்பி என்ன வேண்டியதுதான்.

Blogged using Microsoft Windows Live Writer 2011…

Thursday, June 24, 2010

அரசியல் சாயம் இல்லை: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு

சென்னை: நடப்பது தமிழ் மாநாடு, இதில் தமிழுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதால், திமுகவின் கட்சிக் கொடிகள் முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளன.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் 24, 25ம் தேதிகளில் கோவைக்கு சென்றிருந்தார். பொதுவாகவே முதல்வர் கருணாநிதி எந்த நிகழ்ச்சிக்குச்சென்றாலும், அது கட்சி நிகழ்ச்சியானாலும் சரி, பொது நிகழ்ச்சியானாலும் சரி, அரசு விழாவானாலும் சரி திமுக கொடிகளும் தோரணங்களும் பளபளக்கும்.

உலகத் தமிழ் மாநாட்டுக்காக இரு தினங்கள் முன்கூட்டியே, முதல்வர் கருணாநிதி கோவைக்கு வந்திருந்தபோதும் திமுகவினர், வழி நெடுகிலும் திமுக கொடியை பறக்கவிட்டும், தோரணங்கள், கட்டவுட்டுகள், பேனர்கள் அமைத்தும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால், அதைப் பார்த்து முதல்வர் மிகுந்த அதிருப்தி அடைந்தார். தமிழ் மொழிக்காக நடத்தப்படும் மாநாட்டுக்கு கட்சி சாயம் பூசக்கூடாது என்பதில் கருணாநிதி மிக உறுதியாக இருந்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட்டுவிட்டு சென்னைக்கு வந்தவுடன், இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர், கோவை மாநகர் முழுவதும் திமுக கொடி பறக்கவிட்டது குறித்து தனது வருத்தத்தையும் தெரிவித்தார். அந்த அறிக்கையில், "கோவை விமான நிலையம் தொடங்கி, வ.உ.சி. மைதானம் வரை மாநகரின் பல்வேறு இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள், பதாகைகள், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பொறுப்பேற்றுச் செயல்பட்டுக்கொண்டிருப்போரின் உருவங்கள் தாங்கிய பேனர்கள்', தெவிட்டிப் போகும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்தன.
இதே காட்சியை முதல் நாளே, கோவை மாநகருக்குச் சென்ற துணை முதல்வர் தம்பி மு.க.ஸ்டாலினும் கவனித்துக் கண்டித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில் தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழக அரசால் நடத்தப்படவிருக்கிற மாநாடே தவிர, அது எள்ளின் முனையளவும் கூட கட்சி மாநாடாக காட்சி அளித்துவிடக்கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறேன். கழகக் கொடிகள், பதாகைகளுக்குப் பதிலாக, பொது மக்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்படாத வகையில்-சங்க இலக்கியக் காட்சிகள் அடங்கிய பேனர்கள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலச்சினை தாங்கிய பதாகைகள், பழங்கால மன்னர்களின் படங்கள் போன்றவற்றை அமைக்க வேண்டும். அதுவே எனக்கு மட்டுமல்லாமல் மாநாட்டுக்கு வரக்கூடிய மக்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நிறைவு அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படவேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

கொடிகள்
அகற்றம்!:
கருணாநிதியின் உத்தரவுக்கு இணங்க, இப்போது கோவை மாநகரில் எந்த இடத்திலும் திமுக கட்சிக் கொடியைக் காண முடியவில்லை. வழக்கமாகப் பறந்த இடங்களில் கூட அகற்றப்பட்டுள்ளன.
அரசியல் சாயம் பூசப்படாமல் முழுக்க, முழுக்க செம்மொழியாம் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழை முன்னிலைப்படுத்தி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழுக்கு
பெருமை சேர்க்கும்...
கோவை நகரில் எங்கு பார்த்தாலும் தமிழ் மொழியின் பெருமை, வரலாற்றை பறை சாற்றக் கூடிய வகையில், பழங்கால இலக்கிய காட்சிகளுடன் தமிழை மட்டுமே முன்னிலைப்படுத்தியதற்கான காட்சிகளை மட்டுமே காணமுடிகிறது. கோவை மாநகரம் முழுக்க தமிழ் மணம் கமழுகிறது.
தமிழர் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் விசேஷம் போல மக்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விசாரித்தும் பங்களித்தும் வரும் வகையில் இணக்கமான சூழல் நிலவுகிறது. இதற்குக் காரணம் கருணாநிதியின் இந்த உத்தரவுதான் என்கிறார்கள் பார்வையாளர்கள்.