வருடத்திற்கு ஒருநாள் மட்டும், அதுவும், குறிப் பிட்ட நேரம் மட்டுமே திறந்திருக்கும் மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா, சென்ற, ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. மாநாய்க்கன் மகளாய் பிறந்து, மாசாத்துவன் மகனான கோவலனை திருமணம் செய்து கொண்ட கண்ணகி, கணவருக்காக சகலத்தையும் இழந்த போதெல்லாம் பொறுமை காத்தவர். ஆனால், கணவரை இழந்ததும், பொங்கி எழுந்து, அதற்கு காரணமான பாண்டிய நாட்டு மன்னர் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டவர். தன் கற்பின் சக்தியால், மதுரை நகரையே எரித்தவர். இன்றளவும் களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும், கற்பின் தெய்வமாகவும், கற்புக்கரசியாகவும் போற்றப்படுபவர். அவர் நினைவாக, சேர மன்னன் கட்டியதுதான் இந்த மங்கலதேவி கண்ணகி கோவில். தமிழக - கேரள எல்லையில், குமுளி மலையின் உச்சியில்தான் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து பார்த்தால், சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க, ரம்மியமான சூழ்நிலையில், தேக்கடி அணையும், தமிழக கிராமங்களும் அழகாக தென்படும்.
சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு, இவ்வளவு உச்சியில் கட்டப்பட்ட இந்த கோவில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. முற்காலத்தில், காட்டு வழியாக நடந்துதான், கோவிலை அடைய முடியும். கடந்த, 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயை அடிப்படையாக வைத்து, பின்னாளில், மொழிவாரியாக எல்லை பிரித்த போது கூட, இந்த கண்ணகி கோவில் தமிழகத்தில்தான் இருக்கிறது என்று கேரளா ஒத்துக் கொண்டது. இந்த கோவிலுக்குச் செல்ல, கேரளாவின் குமுளியில் இருந்து, ஜீப்பில், 16 கி.மீ., தூரம் சென்றால்தான், கண்ணகி கோவிலை அடைய முடியும். ஜீப் செல்வதற்காக, எப்போது கேரள அரசு ரோடு போட்டதோ, அப்போது முதல் கண்ணகி கோவில் கேரளாவிற்கு சொந்தம் என்று கூற ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக, வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்ரா பவுர்ணமியையொட்டி, ஒரு வார காலம் எடுக்கப்பட்ட விழா, கெடுபிடி காரணமாக, மூன்று நாட்களாகி, பின், ஒரே நாளாகி, அதுவும் இந்த வருடம் காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மட்டுமே என்று நிர்ணயித்து விட்டனர்.
இந்த ஒருநாள், கண்ணகியின் உருவம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும், தங்குவதற்கும் என்று, பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது; காரணம், கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு.
பழமையான, பாரம்பரியமான, பல்வேறு தமிழ் கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர்களின் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டும். கோவில் மீண்டும் தமிழர்களுக்கே என்று மீட்டு எடுக்க வேண்டும்.
எப்படி செல்வது?
இந்த வருடம் என்னுடைய நண்பர்கள் சிலர் அங்கு சென்று வந்தனர். முதலில் கம்பம் சென்று, பின்பு கூடலூர், அங்கிருந்து பளியன்குடிக்கு ஆட்டோவிலும் காலை ஐந்தரை மணிக்கு சென்றனர். ஏறுவதற்கு கடினமான மலைமீது ஏற ஆரம்பித்து, சரியாக எட்டரை மணிக்கு கோவிலை அடைந்து, சேரன் செங்குட்டுவனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப் பட்ட கோயிலின் ஒவ்வொரு கல்லையும் தொட்டுணர்ந்து சிலிர்த்துப் போனார்களாம். கம்பத்திலிருக்கும் கண்ணகி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தார்கள். அங்கு வரும் தமிழர்கள் கண்ணகி தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்றும், உரிமை என்றும் பேசுவதை கேட்க முடிந்ததாம். முழுவதும் கேரளா காவல்துறையினரால் நிரம்பியிருந்த அப்பகுதியில் சொற்ப அளவில் இருந்த தமிழக காவல் துறையினரை பார்க்க முடிந்தது. அவர்களும் மக்களை ஒழுங்கு படுத்துவதை விட்டு, கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தனராம். நெகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் வயதானவர்கள் கடினமான மலையை கோலூன்றி ஏறி வந்து கண்ணகியை வழிபடுவதுதான். தமிழக அரசோ, தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்களோ இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை என்பது புரிந்த பொது இதயம் வலித்தது.
இதை பற்றி எல்லாம் நம்ம அரசியல் வாதிகளுக்கு எங்க நேரமிருக்கு..? சினிமாவுக்கு கதை வசனம் எழுதவும், பாராட்டு விழாவில் பங்கு பெறுவுமே நேரம் பத்தாது. கண்ணகி கோயில் பற்றிய சர்ச்சை கடந்த ஐம்பது வருடங்களாக உள்ளது. இதுவரையில் யாரும் இதுபற்றி எந்த கோர்ட்டிலும் வழக்கு வில்லை. தமிழனுக்கு இது பற்றி அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை தான் இது பற்றி பேசுகிறார்கள். ஏன் தமிழ்நாடு அரசோ மக்களோ கேஸ் தொடுக்கவில்லை. இது அரசியல் மட்டும். மக்களுக்கு அவசியம் இல்லை என்பதாலே. ...
சரியாகத்தான் சொன்னார்களோ, தமிழ் இனி மெல்லச்சாகும்...